இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ( ஜேஇஇ மெயின்) நான்கு கட்டங்களாக நடத்த தேசிய சோதனை முகமை தயாராக உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி அமர்வுக்கான தேர்வு பிப்ரவரி 23 முதல் 26 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
பிப்ரவரி தேர்வில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் மட்டுமே உள்ளது. மாக் டெஸ்ட் தேர்வுகளில் கலந்து கொள்வது, பாடப்புத்தகங்களைப் படிப்பது என்பதை தாண்டி தேர்வர்கள் சிந்திக்க வேண்டியது முக்கியமானதாகும்.
ஜே. இ. இ தேர்வின் மூலம் இளநிலை கட்டிடக்கலைஞர் (BArch), இளநிலை வடிவமைப்பாளர் (BDes), இளநிலை பொறியியல் பாடதிட்டங்களுக்கு சேர தகுதி பெற முயற்சிக்கும் மாணவர்கள், வரும் நாட்களின் முக்கியத்துவத்தை புரிந்து செயல்படவேண்டும்.
ஜே. இ. இ தேர்வில் வெற்றி பெறுவதற்கு, நேர மேலாண்மை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நேர மேலாண்மை என்பது நாம் அணுகும் அளவிலேயே உள்ளது மற்றும் நமது கைகளிலேயே உள்ளது. 3 மணிநேரத்தில், 75 கேள்விகளை தேர்வர்கள் முயற்சிக்க வேண்டும். எனவே, தேர்வறைக்கு செல்லும் முன்பே, கணித சூத்திரங்கள், விஞ்ஞான சமன்பாடுகள், விஞ்ஞான தத்துவங்களை தினந்தோறும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அண்மையில் முடிவுற்ற ஜேஇஇ தேர்வுகளின் வினா மற்றும் விடைத்தாட்களை புரட்டிப் பார்ப்பது மிகவும் நல்லது.
ஜேஇஇ மெயின் அட்மிட் கார்டுகள் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் முதலில் பலவீனமாக கருதும் பாடத்திட்ட பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். அட்மிட் கார்டு வெளியாகுவதற்கு முன்பே ஒரு சமநிலையை உருவாக்குவது மிகவும் நல்லது
தேர்வு முறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, தேர்வின் ஒவ்வொரு பாடத்திலும் இப்போது இரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டாவது பிரிவில், 10 கேள்விகளில் 5ல் பதில் அளித்தால் போதுமானது. இந்த பிரிவில் எண்ணியல் வகை கேள்விகள் அதிகம் இருப்பதால், தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்லைன் மாக் டெஸ்ட் தேர்வில் தேர்வர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது மிக நல்லது.