/indian-express-tamil/media/media_files/2025/01/13/Hyemp3tU0YvcUbT5GFmf.jpg)
ஜே.இ.இ (JEE Main) முதன்மைத் தேர்வு நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் உயர் அழுத்த சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள், ஒரே நேரத்தில் தங்கள் போர்டு தேர்வு பாடத்திட்டத்தை கையாளும் அதே வேளையில், மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நுழைவுத் தேர்வுகளில் ஒன்றிற்கான தயாரிப்பையும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த முக்கியமான தேர்வுகளுக்கு முந்தைய சில நாட்கள் என்பது, தீவிரமான படிப்பு அட்டவணைகள், ஒழுக்கமான நேர மேலாண்மை மற்றும் எப்போதாவது பதட்டங்கள் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட காலகட்டமாகும்.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Main 2025: How previous aspirants spent their last few days? Mistakes to avoid
கடந்தகால ஆர்வலர்களின் நிஜ வாழ்க்கை அனுபவங்கள், இந்த சவாலான கட்டத்தை எளிதாக கடப்பதற்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (வி.ஐ.டி) இரண்டாம் ஆண்டு பி.டெக் படிக்கும் சுமந்தா பதக்கிற்கு, கடைசி மாதம் திருப்புதல் மற்றும் பயிற்சியால் நிரம்பியிருந்தது. "நான் என் நாளை இரண்டு பகுதிகளாகப் பிரித்தேன், காலை ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் போன்ற போர்டு தேர்வு பாடங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, மாலை ஜே.இ.இ முதன்மை தேர்வு பயிற்சி அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்டன," என்று சுமந்தா கூறினார்.
சுமந்தா தனது தயாரிப்பு நேரத்தில் முந்தைய ஆண்டு ஜே.இ.இ முதன்மை தேர்வு வினாத்தாள்களைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்தார் மற்றும் அவரது ப்ரசண்டேசன் திறனை மேம்படுத்த போர்டு தேர்வுகளுக்கு எழுதும் பயிற்சியில் கவனம் செலுத்தினார்.
இதேபோல், தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி) ஒன்றில் படித்து வரும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் வர்மா, ஜே.இ.இ பாடத்திட்டம் மற்றும் அவரது போர்டு தேர்வுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை விளக்கினார். "இயற்பியல் மற்றும் கணிதம் இரண்டு தேர்வுகளுக்கும் பொதுவானது, எனவே நான் முதலில் அந்த தலைப்புகளில் தேர்ச்சி பெறுவதை உறுதிசெய்தேன். இருப்பினும், கணினி அறிவியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் போர்டு தேர்வுகளுக்கு தனி கவனம் தேவை," என்று ராகுல் கூறினார். பாடங்கள் விடுபடாமல் போவதை பார்த்துக்கொள்ள வாரத்தில் ஒரு நாளை பிரத்தியேகமாக போர்டு தயாரிப்புக்காக ராகுல் ஒதுக்கியது உதவிகரமாக இருந்தது.
இருப்பினும், என்.ஐ.டி சில்சார் மாணவர் ஜுபைர் தனது போர்டு தேர்வுக்கான தயாரிப்பை இரண்டாம் நிலையாக வைத்திருந்தார். "நான் போர்டு தேர்வுகளை முற்றிலும் இரண்டாம் நிலையாக வைத்தேன். 2022 ஜனவரியில் ஜே.இ.இ மெயின் முதல் அமர்வை நான் எழுதிய பிறகு, இரண்டாவது முயற்சிக்கு படிக்கும் வேகத்தில் இருந்தேன். ஆனால் இடையில் இருந்த போர்டு தேர்வுகள் என்னை விரக்தியடையச் செய்தன, ஏனென்றால் அதற்காக நான் எனது ஜே.இ.இ தயாரிப்பில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டியிருந்தது. அது உண்மையில் என் வேகத்தை உடைத்தது. ஆனால் முதல் முயற்சிக்கு முன், நான் முக்கியமாக ஜே.இ.இ தேர்வு மீது கவனம் செலுத்தினேன்,” என்று அந்த மாணவர் கூறினார்.
ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு, குறைந்தபட்சம் அது மிகவும் கடினமான தேர்வு என்ற தவறான எண்ணம் இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். “அப்படியானால், கடைசி சில நாட்களில் என்ன செய்வது, எப்படி தயாரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதிர்ஷ்டவசமாக எனது தேர்வு தேதி கடைசி நாளில் இருந்தது. எனவே, என்னால் வினாத்தாள்களை பகுப்பாய்வு செய்ய முடிந்தது, இதனால் நான் பல நுண்ணறிவுகளைப் பெற்றேன், மேலும் இந்தத் தேர்வு எழுதக்கூடியதாக இருப்பதைக் கண்டேன்,” என்று அவர் கூறினார்.
"நான் அறிந்த மற்றொரு விஷயம் என்னவென்றால், நான் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆழமாக கவனம் செலுத்தினேன், இது ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தேவைப்படும் அணுகுமுறையாகும், அதே ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கே செய்தேன், ஒவ்வொரு தலைப்பின் அடிப்படைகளையும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும், குறைந்தபட்சம் சூத்திரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டும். நான் தவறவிட்ட ஒவ்வொரு அத்தியாயத்திலும் அடிப்படைகளை படித்து முடித்தேன்,” என்று அவர் கூறினார்.
காலையில் மாதிரித் தேர்வு, மதியம் அலசல், பிறகு அன்றைய பேப்பர் அனாலிஸிஸ் என்று அவர் தனது நாளைக் கழித்தார்.
பொதுவான தவறுகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள்
அவர்களின் துல்லியமான திட்டமிடல் இருந்தபோதிலும், பல மாணவர்கள் இந்த முக்கியமான காலகட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஜே.இ.இ தயாரிப்பிற்கு ஆதரவாக போர்டு தேர்வு பாடத்திட்டத்தை புறக்கணிப்பது அடிக்கடி ஏற்படும் ஒரு பிழை. கடந்த ஆண்டு ஜே.இ.இ மெயின் தேர்வில் பங்கேற்ற ஹைதராபாத்தை சேர்ந்த பிரியா நாயர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். "நான் ஜே.இ.இ முதன்மைத் தேர்வு மீது அதிக கவனம் செலுத்தினேன், அதனால் எனது போர்டு தேர்வுகளில் நான் சிறப்பாக செயல்படவில்லை," என்று அவர் ஒப்புக்கொள்கிறார், "பின்னோக்கிப் பார்த்தால், இரண்டையும் சமநிலைப்படுத்துவது ஒரு சிறந்த உத்தியாக இருந்திருக்கும்," என்று அவர் கூறினார்.
ஏற்கனவே முடித்த தலைப்புகளை திருப்புதல் செய்வதற்குப் பதிலாக புதிய சிக்கல்களைத் தீர்ப்பதில் அதிக நம்பிக்கை வைப்பது மற்றொரு பொதுவான ஆபத்து.
தள்ளிப்போடுதல் என்பது பல மாணவர்களின் மற்றொரு பிழையாகும். சிலர் கடினமான பாடங்களை ஒத்திவைக்கிறார்கள், இது கடைசி நிமிட பீதிக்கு வழிவகுக்கும். 2022 இல் ஜே.இ.இ மெயின் தேர்வில் பங்கேற்று, ஜே.இ.இ அட்வான்ஸ்டுக்கு தேர்வான கௌஸ்தாப் தாலுக்தார் இதற்கு எதிராக ஆலோசனை கூறுகிறார். "கடைசி மாதம் புதிய தலைப்புகளைத் தொடங்குவதற்கான நேரம் அல்ல. இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை வலுப்படுத்துவதாகும்."
என்.ஐ.டி சில்சார் மாணவர் மேலும் கூறுகிறார்: “போர்டு தேர்வுகள் மற்றும் ஜே.இ.இ மெயின் தயாரிப்பு அணுகுமுறையில் வேறுபடலாம், ஆனால் அவை நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. போர்டு தேர்வுகளை ஒரு படியாகக் காணலாம் - இங்கு வலுவான செயல்திறன் பெரும்பாலும் உறுதியான அடிப்படை புரிதலை பிரதிபலிக்கிறது, இது ஜே.இ.இ தேர்வுக்கு முக்கியமானது. விதிவிலக்குகள் இருந்தாலும், சில மாணவர்கள் ஜே.இ.இ தேர்வில் சிறந்து விளங்கினாலும், போர்டு தேர்வில் சிறப்பாக செயல்பட முடியவில்லை, ஆனால் விடாமுயற்சியுடன் ஜே.இ.இ தேர்வுக்கு தயாரிப்பது பொதுவாக போர்டு தேர்வுகளிலும் வெற்றியை உறுதி செய்கிறது.”
தற்போதைய ஆர்வலர்களுக்கான உதவிக்குறிப்புகள்
கடந்த கால மாணவர்களின் அனுபவங்களின் அடிப்படையில், இறுதி மாதத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான சில உத்திகள் இங்கே:
யதார்த்தமான கால அட்டவணையை உருவாக்கவும்: போர்டு மற்றும் ஜே.இ.இ மெயின் தயாரிப்பிற்காக குறிப்பிட்ட நேர இடைவெளிகளை ஒதுக்கவும். நீங்கள் இரண்டு பாடத்திட்டங்களையும் திறம்பட உள்ளடக்கியிருப்பதை உறுதிசெய்ய உங்கள் அட்டவணையை சரியாக கடைபிடிக்கவும்.
ஒற்றுமைகளை கண்டறியுங்கள்: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற ஒற்றுமையுள்ள பாடங்களில் கவனம் செலுத்துங்கள். இந்த பகுதிகளில் வலுவான தயாரிப்பு இரண்டு தேர்வுகளுக்கும் பயனளிக்கும்.
மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்யுங்கள்: ஜே.இ.இ தேர்வுக்கு தொடர்ந்து மாதிரி தேர்வுகளை முயற்சிக்கவும் மற்றும் போர்டு தேர்வுகளுக்கான பதில்களை எழுத பயிற்சி செய்யவும். இது நேரத்தை சிறப்பாக நிர்வகிக்கவும், தேர்வு நாள் கவலையை குறைக்கவும் உதவும்.
திருப்புதல் செய்யுங்கள், நெருக்காதீர்கள்: புதிய தலைப்புகளைக் கற்றுக்கொள்வதில் திருத்தத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். விரைவான குறிப்புக்கு சுருக்கமான குறிப்புகளை உருவாக்கவும் மற்றும் முக்கிய கருத்துக்கள் மற்றும் சூத்திரங்களில் கவனம் செலுத்துங்கள்.
எழுதுவதைப் பயிற்சி செய்யுங்கள்: போர்டு தேர்வுகளுக்கு, வேகத்தையும் தெளிவையும் மேம்படுத்த நீண்ட வடிவ பதில்களை எழுதப் பயிற்சி செய்யுங்கள். நேர்த்தி மற்றும் ப்ரசண்டேசனில் கவனம் செலுத்துங்கள்.
ஆரோக்கியமாக இருங்கள்: தூக்கம், ஊட்டச்சத்து அல்லது உடல் செயல்பாடுகளில் சமரசம் செய்யாதீர்கள். நன்கு ஓய்வெடுத்த மனம் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்படுகிறது.
ஜே.இ.இ மெயின் மற்றும் போர்டு தேர்வுகளுக்கு முந்தைய கடைசி மாதம் மிகவும் கடினமாக உணரலாம், ஆனால் உங்கள் கடின உழைப்பை ஒருங்கிணைக்க இது ஒரு வாய்ப்பு என்று இப்போது ஐ.ஐ.டி சென்னையில் இருக்கும் முன்னாள் ஜே.இ.இ ஆர்வலர் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.