செவ்வாய்க்கிழமை தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்ட ஜே.இ.இ (JEE) முதன்மை தேர்வு முடிவுகளின் முதல் அமர்வில் இந்தியா முழுவதும் 23 ஆண் மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், இவர்களில் அதிகமானோர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Main: 23 students score perfect 100; 7 from Telangana
23 பேரில், 7 பேர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள், தலா 3 பேர் ஆந்திரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தலா 2 பேர் டெல்லி மற்றும் ஹரியானா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா ஒருவர். 2023 ஆம் ஆண்டில், முதல் அமர்வில் 20 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் இருந்தனர்.
தகுதிப் பட்டியலின் படி, டாப்பர்கள் பட்டியலில் எந்த ஒரு மாணவியும் இடம் பெறாத நிலையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி த்விஜா தர்மேஷ்குமார் படேல் 99.99 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
முதல் அமர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெறும் ஜே.இ.இ மெயின் இரண்டாம் அமர்வில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இரண்டு மதிப்பெண்களில் சிறந்ததைக் கருத்தில் கொண்டு தேசிய தேர்வு முகமை தரவரிசைகளை அறிவிக்கும்.
ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1, 2024 வரையிலான முதல் அமர்வில், மொத்தம் 11.7 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர், இது கடந்த ஆண்டு 7.69 லட்சத்தில் இருந்து அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், JEE முதன்மை தேர்வின் முதல் அமர்வுக்கு 2023 இல் 8.72 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 2024 முதல் அமர்வுக்கு 12.2 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த ஏழு டாப்பர்களில் ஒருவரும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் மகனுமான ரிஷி சேகர் சுக்லா, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் "தேர்வு முடிவு குறித்து உறுதியாக இருந்ததாக" கூறினார். ஐ.ஐ.டி பாம்பேயில் சீட் மற்றும் அங்கு கணினி அறிவியல் படிப்பில் சேருவதை இலக்காகக் கொண்ட ரிஷி சேகர் சுக்லா, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடர விரும்புகிறார். தேர்வுக்கான அவரது தயாரிப்புகளைப் பற்றி கூறுகையில், "நான் எப்போதும் ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று மணிநேரம் கொடுத்தேன்." என்று சுக்லா கூறினார். இரவு முழுவதும் படிப்பதை விரும்பாத சுக்லா, பகலில் குறைந்தது ஒன்பது மணிநேரம் படிப்பதாகக் கூறினார். சுக்லா இரண்டு வருடங்கள் தேர்வுக்கு தயார் செய்தார்.
ஆந்திராவை சேர்ந்த டாப்பர் தனிஷ் ரெட்டி, தான் 8ம் வகுப்பு முதல் தயாராகி வருவதாகவும், ஒரு நாளைக்கு 13 முதல் 14 மணி நேரம் வரை படித்ததாகவும் கூறினார். "நான் இரண்டு நாட்கள் தயாரிப்புக்காகவும், இரண்டு நாட்களை தேர்வுக்காகவும் செலவழித்தேன். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைத் தீர்ப்பதில் அதிக நேரம் செலவிட்டேன். தேர்வில், பல கேள்விகள் முந்தைய ஆண்டுகளின் தாள்களில் இருந்ததைப் போலவே இருந்தன,” என்று தனிஷ் ரெட்டி கூறினார். இவர் 11ஆம் வகுப்பில் ஸ்ரீ சைதன்யா பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
ரெட்டியின் பெற்றோர்களான ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் கங்கா மகா தேவி ஆகிய இருவரும் ஆசிரியர்கள். "எனது மதிப்பெண்கள் குறைவாக இருந்தபோதெல்லாம், அவர்கள் எப்போதும் என்னை முன்னோக்கிப் பார்க்கவும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கவும் ஊக்குவித்தார்கள்," என்று கூறும் ரெட்டி ஐ.ஐ.டி பாம்பேயில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆராதனா ஆர் 99.99 மதிப்பெண்கள் பெற்று, பட்டியல் சாதி பிரிவில் முதலிடம் பிடித்தார், தெலுங்கானாவைச் சேர்ந்த ஜெகன்னாதம் மோஹித் 99.99 மதிப்பெண்களுடன் பழங்குடியினர் பிரிவில் முதலிடம் பிடித்தார். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஆந்திராவை சேர்ந்த ஷேக் சுராஜ், தமிழ்நாட்டை சேர்ந்த முகுந்த் பிரதீஷ் எஸ், மகாராஷ்டிராவை சேர்ந்த கஜரே நில்கிருஷ்ணா நிர்மல்குமார், ராஜஸ்தானை சேர்ந்த ஹிமான்ஷு தாலோர் ஆகியோர் 100 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“