ஜே.இ.இ (JEE) தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் மூன்றாம் வாரத்தில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தத் தேர்வுக்கான தகுதிகள், தேர்வு தேதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இப்போது பார்ப்போம்.
ஐ.ஐ.டி.(IIT), என்.ஐ.டி. (NIT), ஐ.ஐ.எஸ்.சி (IISc) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் (B.Tech/ B.Arch/ B.Planning) படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கான ஜே.இ.இ தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள்: ஒரு மாணவர் கூட சேராத 25 பொறியியல் கல்லூரிகள்: அண்ணா பல்கலை கவுன்சலிங் ஷாக்
இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஜே.இ.இ தேர்வுகளுக்கான விண்ணப்பச் செயல்முறை நவம்பர் 3 ஆவது வாரத்தில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்: இந்த தேர்வுகளை 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம்.
தேர்வு செயல்முறை: ஜே.இ.இ தேர்வில் பொறியியல் பிரிவுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து தலா 100 மதிப்பெண்கள் என 300 மதிப்பெண்கள் இடம்பெறும். அதேநேரம் B.Arch/ B.Planning பிரிவுகளுக்கு கணிதம், திறனறி வினாக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து தலா 100 மதிப்பெண்கள் என 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஜே.இ.இ தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nta.ac.in/ மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil