ஜே.இ.இ (மெயின்) தேர்வு-2021-இன் முதல் கட்டம் 2021 பிப்ரவரி 23-ஆம் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இணையதளம் வாயிலாகக் கடந்த டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. 2021 ஜனவரி 16, ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதியாகும்.
வரும் கல்வி ஆண்டிற்கான ஜே ஈ ஈ (மெயின்) தேர்வில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. எனவே, விண்ணப்ப செயல்முறையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விசயங்களை இங்கே காணலாம்.
பொதுவாக, ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் ஜே ஈ ஈ (மெயின்) தேர்வு, வரும் கல்வியாண்டில் இருந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு கட்டங்களில் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேர்வில், தேர்வர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதலாம்.
எனவே, தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே ஒன்று அல்லது நான்கு கட்டத் தேர்வுகளுக்கு மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும். முன்பைப் போல், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்வுக் கட்டணங்களை அடுத்த கட்டத் தேர்வுக்கு நீங்கள் மாற்றிக் கொள்ளாலம். தேர்வினை எழுத முடியாத மாணவர்கள் கட்டணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிராந்திய மொழிகளில் தேர்வு: வரும் கல்வியாண்டு முதல் ஜே.இ.இ மெயின் தேர்வை பல மொழிகளில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி) நுழைவுத் தேர்வு நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையுடன் (என்.டி.ஏ) ஆலோசித்து ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளிலும் போட்டித் தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்தி, உருது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து மாணவர்கள் தேர்வை எழுதலாம். எனினும், தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் என இரண்டில் ஒன்றை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். எனவே, விண்ணப்ப செயல்முறையின் போது, இதை கவனத்தில் கொள்வது மிக முக்கியமானதாகும் .
கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.