ஜேஇஇ மெயின் பிப்ரவரி அமர்வுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன. பிப்ரவரி 23 முதல் 26 வரை நாடு முழுவதும் முதல்கட்ட தேர்வு நடைபெறவுள்ள வேளையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 16 கடைசி தேதியாகும். எனவே, தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுவாக, ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் ஜேஇஇ (மெயின்) தேர்வு, வரும் கல்வியாண்டில் இருந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு கட்டங்களில் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேர்வில், தேர்வர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதலாம்.
எனவே, தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே ஒன்று அல்லது நான்கு கட்டத் தேர்வுகளுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். முன்பைப் போல், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்வுக் கட்டணங்களை அடுத்த கட்டத் தேர்வுக்கு தேர்வர்கள் மாற்றிக் கொள்ளாலம். தேர்வினை எழுத முடியாத மாணவர்கள் கட்டணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முறை: மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாடத்திட்டம் : கடந்த கல்வியாண்டு பாடத்திட்டமே தொடரும். எனவே, கடந்த ஆண்டு பாடத்திட்டத்தை கூகுள் இணையத் தேடுபொறி உதவியுடன் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையேல், இந்த இணைப்பைக் கிளிக் செய்து கொள்ளுங்கள்
12 மொழிகளில் தேர்வு: வரும் கல்வியாண்டு முதல் ஜே.இ.இ மெயின் தேர்வை ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு எடுத்துள்ளது.
இந்தி, உருது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து மாணவர்கள் தேர்வை எழுதலாம். எனினும், தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் என இரண்டில் ஒன்றை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். எனவே, விண்ணப்ப செயல்முறையின் போது, இதை கவனத்தில் கொள்வது மிக முக்கியமானதாகும்.
தேர்வுக்கு விண்ணபிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தயாராகுங்கள்:
ஜே. இ. இ தேர்வில் வெற்றி பெறுவதற்கு, நேர மேலாண்மை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நேர மேலாண்மை என்பது நாம் அணுகும் அளவிலேயே உள்ளது மற்றும் நமது கைகளிலேயே உள்ளது. 3 மணிநேரத்தில், 75 கேள்விகளை தேர்வர்கள் முயற்சிக்க வேண்டும். எனவே, தேர்வறைக்கு செல்லும் முன்பே, கணித சூத்திரங்கள், விஞ்ஞான சமன்பாடுகள், விஞ்ஞான தத்துவங்களை தினந்தோறும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அண்மையில் முடிவுற்ற ஜேஇஇ தேர்வுகளின் வினா மற்றும் விடைத்தாட்களை புரட்டிப் பார்ப்பது மிகவும் நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.