யூ.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள்: கடந்த ஜூன் மாதம் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது.
இதில் மொத்தம் 759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 577 ஆண்களும், 182 பெண்களும் அடங்குவர்.
இத்தேர்வில் கனிஷாக் கட்டாரியா என்ற இளைஞர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் முடித்தவர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த கட்டாரியாவின் தந்தையும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தான். இவர், 2010-ம் ஆண்டு நடந்த ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வான IIT-JEE தேர்வில் பட்டியலினத்தவர் பிரிவில் முதலிடம் பிடித்தவர்.
2014-ம் ஆண்டு மும்பை ஐஐடி-யில் பட்டம் பெற்ற கனிஷாக், தென் கொரியாவில் சாம்சங் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதன் பிறகு 2017-ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
இந்நிலையில் 10,65,552 பேர் எழுதிய இத்தேர்வில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
தேர்வு முடிவு வெளியானதும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், ”நான் தென் கொரியாவிலும் வேலை பார்த்தேன். பெங்களூரிலும் வேலை செய்தேன். இரண்டு இடங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நான் உணர்ந்தேன். பெங்களூரை காட்டிலும் தென் கொரியாவில் அடிப்படை வசதிகள் தரமாக இருந்தது.
இந்தியாவில் ஒரு நகரத்திலேயே இவ்வளவு குறைபாடுகள் என்றால் கிராமப்புறங்களின் நிலைமை? எனவே, இந்தச் சமூகத்தின் வளர்ச்சியில் நான் பங்களிக்க விரும்பினேன். அதனால் பொறியியல் துறை வேலையை ராஜிநாமா செய்தேன். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால், இந்தியளவில் முதல் இடம் பிடித்த செய்தி என்னை ஆச்சர்யப்படுத்தியது.
இந்தத் தருணத்தில் என் அம்மா, அப்பா, சகோதரி, என் காதலி அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் கொடுத்த ஊக்கமும், நம்பிக்கையும்தான் என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது. மக்களுக்கு நல்ல ஆட்சியராக நான் இருப்பேன் என்று நம்பிக்கையளிக்கிறேன்’’ என்றார்.
அதோடு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர், “தகுதியான ஒருவருக்கு நன்றி தெரிவிப்பது இயற்கையான ஒன்று. அவள் (கட்டாரியாவின் காதலி) எனக்கு எல்லா விதத்திலும் பக்க பலமாய் இருந்திருக்கிறாள். என் குடும்பத்தினர் கொடுத்த ஆதரவைத் தவிர்த்து, மீதமிருக்கும் எல்லா வழிகளிலும் அவளுடைய ஆதரவை எனக்குக் கொடுத்திருக்கிறாள். முடிவு வெளியானதும் நான் ஊடகத்தில் நிறைய பேசினேன். ஆனால் என் காதலி பற்றிய பகிர்வு இவ்வளவு ஹைலைட்டாகும் என நினைக்கவில்லை” என்றார்.
ஆம்! கனிஷாக் எவ்வளவோ விஷயங்கள் பேசியும், அவர் தனது காதலியைப் பற்றி பகிர்ந்துக் கொண்ட விஷயங்களைத் தான் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் நெட்டிசன்கள்.