ஒரு நாள் கலெக்டராக காரைக்கால் அரசு பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இன்று ஒரு நாள் கலெக்டராக பணியில் இருந்தனர்.
பள்ளி மாணாக்கர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் மாணாக்கர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும் ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவித்தார்.
அந்தவகையில், காரைக்கால் அரசு பள்ளியில் படிக்கும் கோ. சாதனா (திருபட்டிணம் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளி, ஒன்பதாம் வகுப்பு), அஸ்கார பர்சானா (அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைபள்ளியில் பத்தாம் வகுப்பு), இ.வர்ஷ்னி (காரைக்கால் பி.எம்.சி ஜவஹர் நவோதயா வித்யாலயா பதினோராம் வகுப்பு), செ.வித்யா (நிரவி கமாலியா மேல்நிலைபள்ளியில் ஒன்பதாம் வகுப்பு) ஆகியோர் ஒரு நாள் கலெக்டராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனையடுத்து நான்கு மாணவிகளும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியரின் அனைத்து பணிகளையும் மாணவிகள் கண்டறிந்தனர். அதை தொடர்ந்து அனைத்து துறைகளுக்கும் மற்றும் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர். குறிப்பாக வேளாண்மை துறை சார்பில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு அப்பணிகள் குறித்து தெரிந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“