கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் 70 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒன்பது நிகர் நிலை மருத்துவக் கல்லூரிகள் ஆகும். 2024-25 ஆம் கல்வியாண்டில் இளங்கலை (யு.ஜி) மருத்துவ படிப்புகளுக்கு 12,095 இடங்கள் உள்ள நிலையில், நிகர் நிலை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,650 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இளங்கலை (யு.ஜி) மற்றும் முதுகலை (பி.ஜி) படிப்புகளில் மொத்த இடங்களில் 25% இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக தொழில்முறை கல்வி நிறுவனங்களின் (சேர்க்கை ஒழுங்குமுறை மற்றும் கட்டணத்தை நிர்ணயித்தல்) சட்டம், 2006 இன் விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நிகர்நிலை மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுடன் இரண்டு முறை சந்திப்பு நடத்திய நிலையில், பெரும்பாலான கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் (RGUHS) கீழ் செயல்படுகிறது. அதே வேளையில், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) வகுத்துள்ள விதிமுறைகளின்படி நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
தற்போது, மருத்துவ சீட்களில் 40% அரசு ஒதுக்கீட்டுக்கும், 40% தனியார் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும், 15% குடியுரிமை அல்லாத இந்திய (என்.ஆர்.ஐ) ஒதுக்கீட்டிற்கும், 5% மேலாண்மை ஒதுக்கீட்டுக்கும் இட ஒதுக்கீடு முறை உள்ளது. ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 40% இடங்களை வழங்குகின்றன.
இருப்பினும், பெரும்பாலான நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களை வழங்குவதில்லை. அவர்கள் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள், மாநில அரசு மற்றும் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று கூறி அரசு ஒதுக்கீட்டு இடங்களை வழங்க மறுத்தனர். எனவே, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து இடங்களும் தனியார் கோட்டா, என்.ஆர்.ஐ மற்றும் மேலாண்மை கோட்டா இடங்கள் என நிரப்பப்பட்டன.
முதுகலை நுழைவுத் தேர்வு (பி.ஜி.இ.டி) விதிகள் என்ன?
கர்நாடக நிபுணத்துவ கல்வி நிறுவனங்கள் (சேர்க்கை ஒழுங்குமுறை மற்றும் கட்டண நிர்ணயம்) சட்டம், 2006 (பி.ஜி.இ.டி விதிகள் 2006-24) படி, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளைப் பின்பற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஒதுக்கீட்டின் கீழ் தங்கள் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் 25% வழங்க வேண்டும். .
பி.எல். மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநர் சுஜாதா ரத்தோட் ‘தி இந்து’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “யு.ஜி.சி விதிகளைப் பின்பற்றினாலும், பி.ஜி.இ.டி விதிகளின்படி, நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் 25% அரசு ஒதுக்கீட்டு இடங்களை வழங்குவது கட்டாயமாகும். ஆனால், ஒரு சில கல்லூரிகள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்களை வழங்கி வருகின்றன. மருத்துவக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மேற்பார்வையில் நிகர்நிலை மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களின் கூட்டம் நடத்தப்பட்டு, யு.ஜி மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் சம்மதித்துள்ள நிலையில், சில நிர்வாகத்துடன் விவாதித்து முடிவெடுப்போம் என்று கூறியுள்ளனர்." என்று அவர் கூறியுள்ளார்
ஒவ்வொரு ஆண்டும், மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் ‘அத்தியாவசியச் சான்றிதழ் மற்றும் சாத்தியக்கூறு சான்றிதழை’ சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வசதிகள், மருத்துவர்களின் எண்ணிக்கை, விதிகளுக்கு இணங்குதல் ஆகியவற்றை முழுமையாகச் சரிபார்த்த பிறகு மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ‘அத்தியாவசியச் சான்றிதழ் மற்றும் சாத்தியச் சான்றிதழை’ வழங்கும். இந்த விதிகளின்படி அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் வழங்கவில்லை என்றால், மாநில அரசு ‘அத்தியாவசியச் சான்றிதழ் மற்றும் சாத்தியச் சான்றிதழை’ வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“