மத்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்தப் பள்ளிகளில் பால்வடிகா- 1-3 மற்றும் 1-ம் வகுப்பு என இரண்டு நிலைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தப் பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் மார்ச் 21-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பால்வடிகா மாணவர் சேர்க்கை
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பால்வடிகா (Balvatika) எனப்படும் ப்ரீ-கே.ஜி (Pre-KG), எல்.கே.ஜி (LKG), யு.கே.ஜி (UKG) வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவை குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பால்வடிகா-1 மற்றும் 2 ஆம் வகுப்பு ஒரு பள்ளியில் மட்டும்தான் உள்ளது. பால்வடிகா -3 வகுப்பு 18 பள்ளிகளில் இருக்கிறது. தற்போது பால்வடிகா- 1-3 மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
பால்வடிகா வகுப்புகளில் சேர்க்கைப் பெற மார்ச் 31 தேதியின்படி, பால்வடிகா -1க்கு 3 முதல் 4 வயதிற்குள்ளும், பால்வடிகா -2க்கு 4 முதல் 5 வயதிற்குள்ளும் பால்வடிகா -3க்கு 5 முதல் 6 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://balvatika.kvs.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் மொத்தம் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக தொடங்கியுள்ளது 1-ம் வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்க மார்ச் 31-ம் தேதியின்படி, 6 வயது முதல் 8 வயது வரை இருக்கலாம். ஏப்ரல் 1-ம் தேதி பிறகு 6 வயது தொடும் குழந்தைகளுக்கு அட்மிஷன் வழங்கப்படாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க விரும்புகிறவர்கள் https://kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணைப்பின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அட்மிஷன் கட்டணம் ரூ.25, வித்யாலயா விகாஸ் நிதி ஒவ்வொரு மாதம் ரூ.500 மட்டும் செலுத்த வேண்டும். 3-ம் வகுப்பில் இருந்து கணினி கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் கிடையாது. ஆண் குழந்தைகளுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு முதல் கல்வி கட்டணம் மாதம் ரு.200லிருந்து தொடங்குகிறது.
தேவையான ஆவணங்கள்
மாணவர்களின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
சாதிச் சான்றிதழ் (Community Certificate)
சிறப்பு தேவை குழந்தை சான்றிதழ் (தேவைப்படின்)
முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ்
வீட்டு முகவரிக்கான சான்றிதழ் (ஆதார், வாக்காளர் அட்டை அல்லது நிகரான சான்றிதழ்)
குழந்தைகளின் புகைப்படம்
முதல் அறிவிப்பிற்கும் பின்பும் பள்ளிகளில் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பின் ஏப்ரல் 7-ம் தேதி இரண்டாம் அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், பால்வடிகா 2 மற்றும் 2-ம் வகுப்பிற்கு மேல் காலி இடங்கள் இருப்பின் ஏப்ரல் 2-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறும்.