வித்யா கௌரி வெங்கடேஷ்
‘தென்னிந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதன்மையானது’ என்று அழைக்கப்படும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகம், 160 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முதல் பெரிய கல்வி நிறுவனம் ஆகும்.
மெட்ராஸ் பல்கலைக்கழகம் எப்படி உருவானது?
நவம்பர் 11, 1839 தேதியிட்ட ஒரு பொது மனுவின் காரணத்தால் இந்த மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை நிறுவப்பட்டது. ஜனவரி 1840 இல், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் தலைவராக ஜார்ஜ் நார்டன் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பல்கலைக்கழக வாரியம் அமைக்கப்பட்டது.
1854 ஆம் ஆண்டு வரை, இந்திய அரசாங்கம் எல்லா மாநிலத்திற்கும் ஒரே முறையான கல்விக் கொள்கையை உருவாக்கியது. செப்டம்பர் 5, 1857 இல், இந்திய சட்ட சபையின் சட்டத்தின் மூலம் மெட்ராஸ் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
லண்டன் பல்கலைக் கழகத்தின் மாதிரியை அடிப்படை வைத்து, மெட்ராஸ் பல்கலைக்கழகம் கட்டப்பட்டது. “தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் என்பதால் தென்னிந்தியாவின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தாயாக கருதப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைக்கழகங்கள், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை உதாரணமாக வைத்து உருவாக்கப்பட்டவை ஆகும்”, என்கிறார் சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் வி ஸ்ரீராம்.
இடம் மற்றும் வரலாறு
சென்னையின் மையத்தில், மெரினா கடற்கரைக்கு எதிரே, மெட்ராஸ் பல்கலைக்கழகம் 1860 இல் ஆர்.எச்.சிஷோல்ம் என்பவரால் கட்டப்பட்டது. ஆங்கிலேய அரசால் தென்னிந்திய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அவர் முதலில் தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சென்னையில் செனட் ஹவுஸ் கட்ட நியமிக்கப்பட்டார்.
இந்தோ-சராசெனிக் பாணியில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை உருவாக்க முற்பட்டனர். "இந்த பாணி கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் முதலில் சேப்பாக்கம் அரண்மனையிலும் பின்னர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும் செயல்படுத்தப்பட்டது" என்று ஸ்ரீராம் கூறினார்.
சேப்பாக் அரண்மனை (1795 இல் கட்டப்பட்டது) மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் தவிர, சென்னை உயர் நீதிமன்றமும், இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலை பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்த பாணி முக்கியமாக முகலாயத்தால் ஈர்க்கப்பட்ட குவிமாடங்கள் மற்றும் வளைவுகளுடன் கூடிய கட்டுமானமாகும். ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆண்டபோது, இதை உன்னதமான இந்திய பாணியாகக் கருதினர்.
பல்கலைக்கழகம் எவ்வளவு பெரியது?
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மூன்று தனித்த கட்டிடங்களில், கல்வித்துறைகள் பரவியுள்ளன - அவை, செனட் ஹவுஸ், 1935 இல் கட்டப்பட்ட கடிகார கோபுர கட்டிடம் மற்றும் பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடம் ஆகும்.
"மூன்றில் முதல் மற்றும் பெரிய கட்டிடம், செனட் ஹவுஸ் பிரிட்டிஷ் உத்தரவுகளை தொடர்ந்து 1860 களில் கட்டப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் கவர்னரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது” என்று ஸ்ரீராம் கூறினார்.
பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடம் 1961 இல் மூன்று பிரிட்டிஷ் ஆட்களால் கட்டப்பட்டது - பிரைன், அபோட் மற்றும் டேவிஸ். பின்னர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றாண்டு விழா அரங்கம் கட்டப்பட்டது. இன்றும் கூட, பல அரசு நிகழ்வுகள், கல்லூரி விழாக்கள், மற்றும் பிற பொது நிகழ்வுகள் இந்த அரங்கில் நடைபெறுகின்றன.
மெட்ராஸ் பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் 200க்கும் மேற்பட்ட படிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. மேலும், 100 க்கும் மேற்பட்ட கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. இது 53 ஆராய்ச்சி நிறுவனங்களையும் தேசிய ஆராய்ச்சி மையங்களையும் கொண்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களாக ஏபிஜே அப்துல் கலாம், சிவி ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர், மற்றும் சீனிவாச ராமானுஜம் போன்ற முக்கிய பிரமுகர்கள் இருந்தார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.