/indian-express-tamil/media/media_files/2025/02/20/kvT3cMk2uKCCok1h9c0M.jpeg)
தமிழகத்தில் முதன்முறையாக, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனைப்படி கோவை மாநகராட்சி பள்ளிகளில், அறிவியல் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஏ.ஆர்., - வி.ஆர்., என்கிற தொழில்நுட்ப வசதிகளுடன் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏ.ஆர்., (Augmented Reality - AR) தொழில்நுட்பம் என்பது டிஜிட்டல் தகவல்கள், படங்கள், ஒலி மற்றும் 3டி மாடல்கள் போன்றவற்றை, ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் கண்ணாடிகள் போன்ற சாதனங்கள் உதவியுடன் அறிவது. ஒரு மாணவர், இத்தொழில்நுட்பம் மூலமாக, தனது புத்தகத்தில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தின் 3டி மாதிரியை ஸ்மார்ட் போனில் பார்க்கலாம். இது, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை உணர்வுபூர்வமாக மாற்றும்.
இதேபோல், வி.ஆர்., (Virtual Reality - VR) என்பது கம்ப்யூட்டர் மூலம் மெய்நிகர் உலகத்தை உருவாக்கும் தொழில்நுட்பம். 'ஹெட் செட்' அல்லது சிறப்பு சாதனங்கள் மூலம் அறியலாம். இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்கள், சூரிய குடும்பத்தை அருகில் பார்க்கலாம் அல்லது ஒரு விஞ்ஞான ஆய்வகத்தில் பங்கேற்பதை உணரலாம்.
இவ்விரு தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆய்வகங்கள், கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மூலம் மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் அனுபவம் கிடைக்கும்; கடினமான பாடங்களை கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும். இத்தொழில்நுட்பம் வாயிலாக கற்பிக்கும் முறைகள் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு இதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களை வழிநடத்த உள்ளனர். இந்த ஆய்வகங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ''ஏ.ஐ., தொழில்நுட்பம் அடிப்படையில், 'விர்ச்சுவல் ரியாலிட்டி'யை கொண்டு வரும் வகையில் ஆய்வகம் அமைத்திருக்கிறோம். அறிவியல், வரலாறு மற்றும் கணிதம் சார்ந்த மாணவர்களுக்கு கிடைக்கும். காங்கயம் காளையை பற்றி வகுப்பெடுக்கும் போது, காளையின் புகைப்படம் மட்டும் இருக்கும். அதன் சிறப்புகளை 'டிஜிட்டல்' முறையில் பார்க்கலாம். நிலவு எப்படி இருக்குமென நடந்து செல்வது போல் உணரலாம். மின்சாரம் பாய்கிறதென்றால், எவ்வாறு கடத்திச் செல்லப்படுகிறது என்பதை உணர்வுபூர்வமாக அறியலாம். முதல்கட்டமாக, இரு பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறோம். மாணவர்களின் ஆர்வத்துக்கேற்ப மற்ற பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும், என்றார்.
பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.