விமானத்தில் பறக்கும் கோவை அரசுப் பள்ளி மாணவர்கள்; 100% தேர்ச்சிக்கு கிடைத்த பரிசு
100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி; இதனை ஊக்குவிக்கும் விதமாக தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவு
கோவை மாவட்டம் சூலூரில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விமானம் மூலம் சென்னையை சுற்றிப் பார்க்க அழைத்து செல்ல உள்ளனர். விமானத்தில் செல்ல ஆர்வமுடன் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisment
கோவை மாவட்டம் காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், கடந்த கல்வியாண்டில் காங்கேயம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இணைந்து அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது. தற்போது பள்ளியில் பயின்று வரும் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.
பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 46 பேரையும் நாளை காலை சென்னைக்கு செல்லும் விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளனர். அனைத்து மாணவர்களும் ஆசிரியர்கள் துணையோடு பயணிக்க உள்ளனர். ஒரு நாள் பயணமாக சென்னை செல்லும் மாணவர்கள் அங்குள்ள தலைவர்களின் சமாதி மற்றும் மெட்ரோ ரயில், அரசு நூலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு பின்னர் ரயில் மார்க்கமாக கோவை வர உள்ளனர்.
இதுபோன்று ஊக்குவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உத்வேகத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது, தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சிக்கு அடுத்த தலைமுறை மாணவர்களும் முயற்சி மேற்கொள்ள இது வழிவகுக்கும் என்று மாணவர்கள் கூறினர். விமானத்தில் செல்ல ஆர்வமாக இருப்பதாக மாணவ மாணவிகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil