மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் வேண்டுமென ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை கரும்புக்கடை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக மாநகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: 6-ம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி விளையாட்டு: பாடத்தை நீக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு
பல ஆண்டுகளாக அந்த துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாமல் இருந்தது. மேலும் தரமான பள்ளிக்கட்டிடம், மதில் சுவர் கழிவறைகள் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. எனவே அடிப்படை வசதிகள் வேண்டிய பகுதி மக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வந்ததை தொடர்ந்து பள்ளி கட்டிடம் மற்றும் கழிவறைகள் சீரமைக்கப்பட்டது.
இருப்பினும் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இரண்டு கழிப்பறைகள் மற்றும் 3 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.
எனவே பத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் தேவைப்படுவதாகவும் கூடுதல் கழிவறை வசதிகள் தேவைப்படுவதாகவும் குழந்தைகள் விளையாட விளையாட்டு மைதானம், படிப்பதற்கு நூலகம் தேவைப்படுவதாகவும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை மேல்நிலை பள்ளியாக மேம்படுத்தி அருகில் உள்ள இடத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டி தருமாறும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil