/indian-express-tamil/media/media_files/TQjpclqj4WqgLowPnmpz.jpg)
ஆர்.டி.இ மாணவர் சேர்க்கை முடக்கம்: இணையதளத்தை உடனடியாகத் திறக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பிரச்னை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
வழக்கின் பின்னணி:
மறுமலர்ச்சி இயக்கத்தின் நிர்வாகியான ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். அந்த உத்தரவில், மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்காவிட்டாலும், மாணவர் சேர்க்கைக்கான நிதியை தமிழக அரசே ஒதுக்கி உடனடியாகச் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால், மத்திய அரசு தனது பங்கான 60% நிதியை ஒதுக்கவில்லை. மாநில அரசு தனது 40% நிதியை ஒதுக்கத் தயாராக இருந்தாலும், மத்திய அரசின் நிதி இல்லாததால் இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதாடுகையில், "இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உண்டு. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது" என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "நடப்பு கல்வியாண்டு தொடங்கி 2 மாதங்கள் ஆன நிலையில், மாணவர் சேர்க்கைக்கான இணையதளப் பக்கம் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை? மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பிரச்னை காரணமாக மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?" என்று கடுமையான கேள்விகளை எழுப்பினர். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, கவுரவம் பார்க்காமல் இணையதளப் பக்கத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.