அமெரிக்க துணை தூதரக அமெரிக்க மையத்துடன் இணைந்து பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க சென்னை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் அமெரிக்க மையத்துடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்க இருக்கிறது.
இதற்கான பயிலரங்கம் சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஆசிரியைகளுக்கான பயிலரங்கம் ஜூலை 9 முதல் 11 ஆம் தேதி வரையும், மாணவிகளுக்கான பயிலரங்கம் ஜூலை 19 முதல் 30 ஆம் தேதி வரையும் நடைபெறும்.
இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்பும் ஆசிரியைகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். பணிக்காலம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இருக்க வேண்டும். 20 பேர் அனுமதிக்கப்படுவர்.
அதேபோல், மாணவிகளைப் பொறுத்தவரையில் அரசு மாதிரி பள்ளி அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 13 முதல் 16 வரை இருக்க வேண்டும். மொத்தம் 20 பேர் பங்கேற்கலாம்.
இந்த திறன் மேம்பாட்டு பயிலரங்கில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவிகள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ள கியூ.ஆர் கோடு-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
தகுதியான நபர்களை சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அமெரிக்க கல்வி மைய நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தேர்வுசெய்வர். மேலும் விவரங்களுக்கு சென்னை பல்கலைக்கழக இயற்பியல் துறை தலைவர் பேராசிரியை ரீட்டா ஜான் என்பவரை 95662 45138 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“