சென்னைப் பல்கலைக்கழகம் 2022-23 கல்வியாண்டில் அதன் இணைப்புக் கல்லூரிகளில் பட்டப் படிப்புகளை மேற்கொள்வதற்காக ஏழை மாணவர்களிடமிருந்து இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) இளங்கோவன் வெள்ளைச்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஏழை மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கஉதவும் வகையில், பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவில்லாதவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“