சென்னை பல்கலைக்கழகம் 2021-22 கல்வியாண்டில் அதன் உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏழை மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் தலா இரண்டு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 2010-11 முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
"பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், அனாதைகள், விதவைகளின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகளுக்கும் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை கோரும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்" என்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் என்.மதிவாணன் கூறியுள்ளார்.
ஆன்லைன் விண்ணப்ப படிவம் மற்றும் இந்த திட்டத்தின் விவரங்கள் ஜூன் 28 முதல் பல்கலைக்கழக வலைத்தளமான www.unom.ac.in இல் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil