திருநங்கைகள் உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில், வரும் கல்வியாண்டு (2022-23) முதல் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் இளங்கலைப் படிப்புகளில் சேர திருநங்கைகளுக்கு தலா ஒரு இலவச சீட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னை பல்கலைக்கழகம் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கல்லூரியிலும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு மாணவர்களை இளங்கலைப் படிப்புகளை பயில இலசமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.கௌரி கூறுகையில், " ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கைகளுக்கு குறைந்தது ஒரு இருக்கையாவது ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் திருநங்கைகள் கல்லூரிக் கல்வியைத் தொடர்வதை உறுதிசெய்ய முடியும்.அடுத்த கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத்தில் சேரும் அனைத்து திருநங்கைகளுக்கும் கல்விக் கட்டணத்தை பல்கலைக்கழகம் தள்ளுபடி செய்யும் என தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரைக்கு அடுத்த கூட்டத்தில் சிண்டிகேட் குழுவின் ஒப்புதலைப் பெற பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு, பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளிலும் திருநங்கைகளுக்கு சூப்பர்நியூமரரி இருக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகத் துறைகளில் திருநங்கைகள் யாரும் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ், சென்னை பல்கலைக்கழகம் கடந்தாண்டு 131 இணைப்பு மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 340 மாணவர்களைச் சேர்த்து கொண்டது. மாணவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, இந்த பிரிவில் பயில தகுதியானோர் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். திருநங்கைகளுக்கும் இதே நடைமுறைகள் பின்பற்றப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து லயோலா கல்லூரியின் முதல்வர் தாமஸ் அமிர்தம் கூறுகையில், பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதிகமான திருநங்கை மாணவர்களை சேர்க்க வேண்டும். இது அவர்கள் படிப்புகளை முடித்து நல்ல வேலைகளில் இடம்பெற உதவும் என்றார்.
லயோலா கல்லூரி அதன் UG அல்லது PG திட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு திருநங்கைகளை சேர்த்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil