கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, ஓராண்டாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது.
ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்த செமஸ்டர் தேர்வுகளும், நேரடியாக நடைபெறும் என உயர் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, ஜனவரி 21 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா அதிவேகமாக பரவ தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவம் அல்லாத பிற கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு, 21 ஆம் தேதி முதல் பல்கலைக்கழக்ததில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவிருந்தன.
இந்நிலையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil