தமிழகத்தில் வரும் 8ம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் வழியாக வகுப்புகள் ஜூன் மாதம் வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை கல்லூரி மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிகள் செயல்பட அனுமதி அளித்த காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் சென்னைக்கு பயணித்தனர். தற்போது, சென்னை பலகலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால், சொந்த ஊகளுக்கு திருப்பும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாணவர் ஒருவர், " பல மாணவிகளிடம் ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற வசதிகள் இல்லை. அவர்களால் தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்பின் பயனைப் பெற முடியாமல் போகிறது. பல கிராமங்களில் கிராமங்களில் இணைய வசதி பெரும் சவாலாக உள்ளது. நேரடி வகுப்புகள் தான் தீர்வாக அமையும்" என்று தெரிவித்தார்.
இருப்பினும், கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு கருதி சில மாணவர்களும், பெற்றோர்களும் சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை வரவேற்கின்றன.
முன்னதாக, இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (2 GB Data) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கிட முதல்வர் உத்தரவிட்ட்டார்.
இருப்பினும், இணைய வசதி இல்லாத , ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடக உபகரணங்களைப் பயன்படுத்த தெரியாத, முடியாத மாணவர்களுக்கு சிக்கல்கள் நீடித்து வருகின்றனர். நேரடி வகுப்புகளுக்கு மாற்றாக இணைய வழிக் கல்வியின் மூலம் பாடத்தின் மையக்கருத்தை புரிந்துக் கொள்வதும் விளிம்பு நிலை மாணவர்களுக்கு சவாலாகவே உள்ளது.
தமிழகத்தில், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகள், திரையரங்க வளாகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil