தமிழில் 100-க்கு 138 மார்க்; இதர 4 பாடம் ஃபெயில்: மதுரை மாணவியை மிரளவைத்த பிளஸ் 2 மார்க் ஷீட்
மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு தமிழில் 138 மதிப்பெண் என்றும் இதர பாடங்களில் ஃபெயில் எனக் குறிப்பிட்டு 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த (திங்கட்கிழமை) மே 8-ம் தேதி வெளியானது. பொதுத் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 94.03% பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
Advertisment
இந்தநிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஆர்த்தி,19 என்ற மாணவி தேவஸ்தானம் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வெழுதினார். திங்கட்கிழமை தேர்வு முடிவுகளை பார்த்த ஆர்த்தி மற்றும் அவரது கணவர் வேல்முருகன்(26) இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அதில், தமிழ் பாடத்தில் 138 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய நிலையில் 138 எனக் குளறுபடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மற்ற பாடங்கள் இயற்பியல் 75, வேதியல் 71, கணிதம் 56, உயிரியல் 82 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் ஃபெயில் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கிலம் சேர்த்து மொத்த மதிப்பெண்கள் 514 என மதிப்பெண் பட்டியல் வெளியானது.
இதனால் ஆர்த்தி, வேல்முருகன் இருவரும் குழப்பம் அடைந்தனர். ஆர்த்தி கூறுகையில், "நான் இந்த ஆண்டு கல்லூரியில் சேர விரும்பினேன். ஆனால் நான் தேர்ச்சி பெற்றேனா அல்லது தோல்வியடைந்தேனா என்று தெரியாமல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனது உண்மையான மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில பாடங்களில் தோல்வியடைந்தாலும், மீண்டும் தேர்வு எழுத தயாராக உள்ளேன்" என்று கூறினார்.
தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளோம். இரு நாட்களில் சரியான மதிப்பெண் பட்டியல் கொடுப்பதாக கூறியுள்ளனர் என்றார். 2021-ம் ஆண்டு பிளஸ் 1 முடிந்த ஆர்த்தி குடும்ப சூழ்நிலை காரணமாக வேல்முருகனை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்த்தி இந்தாண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“