மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள கிராமம் உத்தபுரம். இங்கு கொத்தனார் பணி செய்து வரும் அழகு முருகன், தனது மகன் பீமனை ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார். கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அம்மாணவர், தற்போது திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம் (பி.ஏ) படித்து வருகிறார்.
இந்நிலையில், ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கொத்தனார் அழகு முருகனை பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபால் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் அழைத்திருந்தனர்.
கடந்த மூன்று நாட்களாக பள்ளிச் சுவர்களில் பூச்சுப் பணி, வெள்ளை அடித்தல், வளாகத் தூய்மை என பல்வேறு பணிகளை அழகு முருகன் மேற்கொண்டார். பணிகளை முடித்த பிறகு தலைமை ஆசிரியர் தனபால் அவருக்குரிய மூன்று நாள் கூலியை கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து கொத்தனார் அழகுமுருகன் பேசுகையில், "எனது மகன் பீமன் கடந்த வருடம் இப்பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்து முடித்து இப்போது திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம் (பி.ஏ) படித்து வருகிறார். எனது மகனின் ஆசிரியர் முருகேசன் மாணவர்கள் நன்றாக படிப்பதற்காக மின்விசிறிகள், வகுப்பறைக்கு வர்ணம் பூசுதல், பரிசுப் பொருட்கள், மேசை மற்றும் இருக்கைகள் போன்ற உதவிகளை பொது மக்களிடமிருந்து பெற்று பள்ளிக்குத் தந்துள்ளார்.
எங்களின் சார்பாக நாங்களும் பள்ளி வளர்ச்சிக்கு ஏதாவது உதவி செய்ய ஆசைப்பட்டோம். ஆனால் கொடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. என் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுத்த இப்பள்ளிக்கு எனது உழைப்பிற்கான கூலியை பெறாமல் விரும்பி மகிழ்ச்சியுடன் இந்தப் பள்ளிக்காக அர்ப்பணிக்கிறேன்" என்று கூறினார்.
இது தொடர்பாக பள்ளியின் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் கூறுகையில், "மாணவர் பீமன் கோடை விடுமுறையில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள் மற்றும் மரங்கள் நட்டு வளர்த்து தொடர்ந்து பராமரித்து வந்தார். அவரின் இந்த தன்னார்வமிக்க சேவையை அறிந்த தனியார் நிறுவனம் மாணவர் பீமனைப் பாராட்டி, அவரது உயர்கல்விக்கு ரூ.25,000 வழங்கி உதவி செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மாணவர் பீமனின் தந்தையும் அரசு பள்ளிக்கு இலவசமாக பராமரிப்பு பணி செய்துள்ளார்" என்றார்.
கொத்தனார் அழகுமுருகன் மற்றும் மாணவர் பீமனை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர். மேலும், இலவசமாக அரசுப் பள்ளிக்கு பூச்சுப் பணி செய்த கொத்தனார் அழகுமுருகனை பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
செய்தி: சக்தி சரவணக்குமார் - மதுரை மாவட்டம்
#VideoViral || மகன் படித்த அரசு பள்ளிக்கு இலவசமாக பூச்சுப் பணி செய்த கொடுத்த தந்தை - வைரல் வீடியோ!https://t.co/gkgoZMHWlc | #Madurai | #tngovtschools pic.twitter.com/QEd2LqSYzi
— Indian Express Tamil (@IeTamil) August 22, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.