போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் வசதியாக உட்கார்ந்து படிப்பதற்காக மதுரையில் படிப்பக வளாகம் என்ற பூங்கா தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு வேலைக் கனவுவோடு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் ஒரு பகுதியினர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தயாராகி வருகின்றனர். அதேநேரம் வசதியில்லாத ஏழை தேர்வர்கள் நூலகங்கள், ரயில் நிலைய மேடைகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்களில் உள்ள பொது இடங்கள் ஆகியவற்றில் அமர்ந்து படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: மதுரை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 31 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!
பல்வேறு மாவட்டங்களில் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் படிப்பதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் போட்டித் தேர்வுக்கு படிக்கும் தேர்வர்கள் படிப்பதற்காக மதுரையில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மதுரையில் புதிய முயற்சி. மாநிலத்தில் முதன்முறையாக போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான “படிப்பக வளாகம்” துவக்கியுள்ளோம், எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த வீடியோவில், உலகத் தமிழ் சங்கத்திற்கு அருகில் படிப்பதற்காக பூங்காவை அமைத்துள்ளோம். குறிப்பாக போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இது உதவும். மதுரையில் பல்வேறு பூங்காக்களில் மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு படிப்பதற்காக மட்டும் ஒரு பூங்கா இருந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் அடிப்படையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.30 லட்சம் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்காக அறையும் திறக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் பல்வேறு இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலத்திலேயே இது ஒரு முதல் முயற்சி. இன்னும் நிறைய வசதிகளை செய்ய உள்ளோம், என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil