முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
மதுரை திருநகரில் உள்ள பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பிக்க கடந்த ஜூலை 20 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு அல்லது பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2025 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று 17 வயதை பூர்த்தி செய்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.
விருப்பமுள்ளோர், மதுரை திருநகரில் உள்ள பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரில் தொடர்புக் கொண்டு மேலதிக விபரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.