மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், மதுரா கல்லூரி பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு விராதனூர் அருகே, பேருந்திற்காக காத்திருந்தபோது, அரசுப் பேருந்து மோதியதில் கால் மற்றும் இடுப்பில் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 27 வரை நடைபெறுகிறது. முதலாம் நாளாக நடைபெற்ற தமிழ் மொழித் தேர்வில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே படித்து வந்த தினேஷ், உதவியாளரின் உதவியுடன் தேர்வு எழுதி வருகிறார்.
சிறு வயதில் தந்தையை இழந்த தினேஷ், கூலித்தொழிலாளியான தனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, கடுமையான வேதனையையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுதுவது ஆசிரியர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது கல்வியை தொடரும் அவரது விடாமுயற்சி, மற்ற மாணவர்களுக்கு உந்துசக்தியாக அமையும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.