ஜூன் 7, 8 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த உதவிப் பேராசிரியர்களுக்கான செட் (SET) நுழைவுத் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட செட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிய, அரசு சார்பில் நடத்தப்படும் நெட் (NET) அல்லது செட் (SET) எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறையில் 'செட்' தேர்வை நடத்தி வருகின்றன. கடைசியாக கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியது.
இந்த நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செட் எனப்படும் தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது.
முதலில் இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின்னர், இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, இறுதியாக மே 15 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் செட் தேர்வில் பங்கேற்க சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
மேலும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் செட் தேர்வு நடத்தப்படும் என மனோன்மணியம் பல்கலைக்கழகம் அறிவித்தது. முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென செட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "ஜூன் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த செட் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“