தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்களும் உட்பட 83 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. நான்கு சுற்று ஆன்லைன் கவுன்சிலிங்கிற்குப் பிறகும் இந்த இடங்கள் நிரப்பப்படவில்லை.
மேலும் ஐந்தரை ஆண்டு காலப் படிப்புக்கும் இந்த இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுக் கல்லூரிகளில் இடங்களுக்கான பெரும் தேவை இருந்தபோதிலும், கவுன்சிலிங் முடிந்த பிறகும் காலியாக உள்ள இடங்களை ஒப்படைக்க மறுக்கும் தேசிய மருத்துவ கவுன்சிலின் தவறான கொள்கையின் விளைவு இது.
இப்போது, தேசிய மருத்துவ கவுன்சில் அல்லது அரசாங்கம், கவுன்சிலிங் காலக்கெடுவை நீட்டிக்க அல்லது மற்றொரு சுற்று கவுன்சிலிங்கிற்கு உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை என்றால், இந்த இடங்கள் நிரப்பப்படாமல் போகும்.
புதுதில்லியில் உள்ள சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்தின் கீழ் உள்ள மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மற்றும் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள மாநிலத் தேர்வுக் குழுவின் நான்கு சுற்று ஆன்லைன் கவுன்சிலிங்கிற்குப் பிறகும் இந்த MBBS இடங்கள் நிரப்பப்படவில்லை.
’உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாங்கள் மாநில அரசுக்கோ அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கோ இடங்களைத் திருப்பித் தருவதில்லை.
ஆனால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மாணவர்கள் சேராத அனுபவத்தை கருத்தில் கொண்டு, ஒதுக்கப்பட்ட இடங்களை எடுக்காத மாணவர்கள் டிபார் (debarred) செய்யப்படுவார்கள் என்று நாங்கள் கூறினோம். இது காலியிடங்களைக் குறைக்க எங்களுக்கு உதவியது, ஆனால் எங்களால் அதை முழுமையாக நிறுத்த முடியவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் மாதம் மாணவர் சேர்க்கை முடிந்தது’, என்று மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மாநில சுகாதாரத் துறையின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 16 எம்பிபிஎஸ் இடங்கள் - மதுரை மருத்துவக் கல்லூரியில் மூன்று, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் தலா இரண்டு, கோவையில் உள்ள ESIC மருத்துவக் கல்லூரியில் தலா ஒன்று மற்றும் கரூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், நீலகிரி, திருவள்ளூர் மற்றும் திருப்பூர்- மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்டது. ஆனால் இது நிரப்பப் படவில்லை.
மேலும், ஆண்டுக்கு 26 லட்சம் வரை கல்விக் கட்டணம் செலுத்தும் நகரத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 இடங்கள் காலியாக இருந்தன சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 13 இடங்களும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் நான்கு இடங்களும் காலியாக உள்ளன.
பல் மருத்துவப் பிரிவில் அரசுக் கல்லூரிகளில் குறைந்தபட்சம் 24 பிடிஎஸ் இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் 206 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 51 இடங்களும் காலியாக உள்ளன.
தமிழ்நாடு 800க்கும் மேற்பட்ட இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விட்டுக்கொடுத்தது. இது அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் 15% ஆகும்.
எனவே, அரசு கல்லூரிகளில் அதிக தேவை உள்ள இடங்கள் நிரப்பப்படுவதை உறுதி செய்ய, உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆலோசகர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“