நிகழாண்டில் செப்டம்பா் 30ம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்கள் செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய அளவிலான மருத்துவ கலந்தாய்வு மற்றும் மாநில அளவிலான கலந்தாய்வுகளின் மூன்று சுற்று முடிவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 1641 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன.
எனவே தமிழகம் போன்ற மாநிலங்கள், செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் காலி இடங்களை மாநில கவுன்சலிங்கிற்கு வழங்க வேண்டும் அல்லது சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா, பிகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபரில் கலந்தாய்வு நடத்தி காலியாக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. .
இது தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு; ’நிகழாண்டு எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி மற்றும் நேரடிக் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் செயல்பாடுகள் என்.எம்.சி. விதிகளுக்கும், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கும் புறம்பானவை.
காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவா் சோ்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்துள்ளது.
எனவே, என்.எம்.சி. அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது என்றும், ஒருவேளை மாணவா்களை கல்லூரிகளில் சோ்த்திருந்தால் அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும்’ அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“