வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் தமிழக மாணவர்கள், இந்தியாவில் பணியாற்ற நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையிலும், தமிழகத்தில் கட்டாய பயிற்சியை முடிக்க அரசு அனுமதி கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக, இந்து ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் (FMGs), குறிப்பாக 2016-2021 தொகுதியில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள், இந்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்த நிலையிலும், தமிழகத்தில் தங்கள் கட்டாய சுழற்சி குடியிருப்புப் பயிற்சியை (CRRI) தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதிக்காகக் காத்திருப்பதால், சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு மவுசு அதிகம். தமிழகத்தில் இந்தியாவிலே அதிக எண்ணிக்கையில் மருத்துவ இடங்கள் இருந்தாலும், அதையும் தாண்டி எம்.பி.பி.எஸ் படிக்க ஆர்வம் அதிகமாக உள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்கின்றனர். பல்வேறு நாடுகளில் இந்திய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டாலும், பெரும்பாலானோரின் தேர்வு சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளாக உள்ளது. ஏனெனில் இங்கு கட்டணம் மலிவு, மற்றும் பாடத்திட்டம் இந்தியாவைப் போலவே உள்ளது.
அதேநேரம் எந்த நாட்டில் மருத்துவம் படித்தாலும், இந்தியாவில் நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், இந்தியாவில் பணியாற்ற முடியும். மேலும், ஒரு வருட கட்டாய பயிற்சியை முடிக்க வேண்டும். இந்த நிலையில் 2016-2021 தொகுதியில் படித்த தமிழக மாணவர்கள் இந்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும், கட்டாய பயிற்சியை தொடங்க தமிழக அரசு இன்னும் அனுமதிக்காததால், தவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களில் உள்ள மருத்துவ கவுன்சில்கள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் பயிற்சி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கவில்லை. இதனால் 100-150 வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கோவிட்-19 லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் திரும்பியவர்கள். பின்னர் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் மற்றும் செமஸ்டர்களில் கலந்துக் கொண்டவர்கள்.
இந்த விவகாரம் குறித்து தமிழக சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ”தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2022 ஆம் ஆண்டு முதல் போரினால் பாதிக்கப்பட்ட ரஷ்யா மற்றும் உக்ரைன் பல்கலைக்கழகங்களின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை நிபந்தனையின் அடிப்படையில் இந்தியாவில் பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது. ஆஃப்லைனில் (நேரடியாக கல்லூரியில்) படிப்பை முடிக்க ரஷ்யா அல்லது உக்ரைனுக்குத் திரும்பிச் சென்றவர்கள், இந்தியாவில் ஒரு வருட இன்டர்ன்ஷிப் செய்யலாம். திரும்பிச் செல்லாதவர்கள், இரண்டு வருடங்கள் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். இதைத் தெளிவுபடுத்தி, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு அனுமதி வழங்குமாறு கூறியுள்ளோம்.
இருப்பினும், சீனா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து மருத்துவ பட்டதாரிகள் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. சீனா மற்றும் பிற இடங்களைப் பொறுத்தவரை, ஒரு வருடம் வரை ஆன்லைன் படிப்பை முடித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (CRRI) வழங்கப்படலாம் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளோம். ஆனால் அவர்கள் 15 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் படிப்பை மேற்கொண்டிருந்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தேசிய மருத்துவ ஆணையத்தால் நடத்தப்படும் ஒரு சிறப்புத் தேர்வை பரிந்துரைக்கிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் இன்டர்ன்ஷிப்பிற்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். சிறப்புத் தேர்வுக்கான தேதியை நிர்ணயம் செய்யுமாறு தேசிய மருத்துவ ஆணையத்திடம் நாங்கள் கேட்டுள்ளோம், அதேநேரம் தேர்வு நடத்தப் போவதில்லை என்றால் அதையும் தெளிவுபடுத்த கேட்டுள்ளோம்,” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“