தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெரும் வகையில், மருத்துவப்படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த சட்டத்தால் நடப்பு ஆண்டில் 400-க்கு மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக தனியார் பள்ளிகளுக்கு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
மேலும் ‘அரசியலமைப்புக்கும் அடிப்படை உரிமைக்கும் எதிரான இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், ஏற்கெனவே பல்வேறு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 7.5% இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது என்பது தங்களுக்கான உரிமைகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில் பதில் கூறுகையில், ஏற்கனவே கலந்தாய்வு நடைபெற்று மாணவர்சேர்க்கை முடிந்துவிட்டது. தற்போது அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சட்டத்திற்கு இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கக்கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து பதிலளிக்க 2வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது.
தமிழக அரசின் இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் இந்த சட்டத்தை எதிர்த்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்றும், 2 வாரத்திற்குள் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"