தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையை விட தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் உறுப்பினரும், முன்னாள் துணைவேந்தருமான ஜவகர் நேசன் கூறியுள்ளார்.
அந்த குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர். பிறகு செய்தியாளர்களிடம் ஜவகர் நேசன் கூறியதாவது:
"சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்களிலும் மற்றும் சில கல்லூரிகளிலும், ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும்.
தேசிய கல்விக் கொள்கையை அளவுகோலாக வைத்து தமிழக கல்விக் கொள்கையை உருவாக்கினால், நம்முடைய பரந்துபட்ட பார்வை அடிபடும்.
தமிழ்நாட்டிற்கெண்டு ஒருசில தேவைகள் இருக்கின்றது, இங்கு நிலைமைகள் இருக்கின்றது, அதோடு பிரச்சனைகளும் இருக்கிறது. அப்போது அதற்கு உண்டான கல்வியை தற்போது வழங்க வேண்டும்.
அப்படி கல்விக் கொள்கை உருவாக்கிய பின்பு, ஏதாவது இன்னல்கள் தென்பட்டால் அதை மாற்றிக்கொள்வோம், ஆனால் சட்டப்படி உள்ள விதிகள் எதையும் நாங்கள் மீற மாட்டோம்.
சட்டத்திற்குள்ளே நம்மால் முடிந்த வரை தனித்துவமான கல்விக் கொள்கையை தமிழகத்திற்கு வழங்குவோம்", என்றார்.