Minister Anbil Mahesh announced Next academic year school opening date: அடுத்த கல்வியாண்டிற்கு பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் பொதுமக்களுக்கான 23 வகை சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம், ஆசிரியர்களுக்கான மின்பதிவேடுகள், ஆசிரியர்களுக்கான பணிப்பயன் செயலி, வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி, ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி, வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 20ல் இருந்து 12ம் வகுப்புகள் தொடங்கப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழக முதல்வர் ஆணைக்கினங்க, இணையவழி தொடக்க நிகழ்ச்சி, மற்றும் 2022-23 கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்ட நாட்காட்டி வெளியிடுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள், 25 வகையான சான்றிதழ்களை, மக்கள் நேரடியாக விண்ணப்பித்து பெற வேண்டிய அவசியம் இல்லாமல், எளிமையான முறையில் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மின்பதிவேடுகள் இல்லாமல் இருந்தபோது ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்ட ரிஜிஸ்டர்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. இதனை எளிமையாக்க பணி பயன் செயலி, கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 20 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கும், ஜூன் 27 ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும்.
இதுதவிர மாணவர்கள், இணையம் வாயிலாக அடுத்த ஆண்டு பள்ளி திறப்பு, காலாண்டு அரையாண்டு தேர்வு எப்போது என்பதை பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் விடுமுறை தினங்கள் எப்போது என்ற விவரங்களும் அதில் உள்ளன.
இதையும் படியுங்கள்: ‘ஸ்மார்ட்’ ஆகும் திருச்சி மாநகராட்சி பள்ளிகள்: தொடுதிரை மூலமாக பாடம்
வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளது. மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் பள்ளி துவங்கிய பின் வழங்கப்படும். 1ஆம் முதல் 5ஆம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும். எனவே மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil