தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் செலுத்தலாம் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து பள்ளி, கல்லூரிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. கொரோனாவின் முதல் அலை சற்று குறைந்திருந்த நவம்பர் முதல் ஜனவரி வரை, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பின்னர் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருப்பதால் கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக முதலமைச்சரின் நடவடிக்கைகளால் தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலை பரவக்கூடும் என்ற எதிர்பார்க்கப்படுவதால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
அவ்வாறு பள்ளிகள் திறக்கப்படும்போது, பெற்றோர்கள் அச்சம் தவிர்த்து தைரியத்துடன் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப முன்வர வேண்டும். எவ்வாறாயினும், மருத்துவர்களிடமும் பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்ற கருத்துக்களே அதிகம் வருகின்றன. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும்.
தமிழகத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தனியார் பள்ளிகளில் தவணை அடிப்படையில் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் தவணையாக 40% கட்டணத்தையும், இரண்டாம் தவணையாக 35% கட்டணத்தையும் பெற்றோர்கள் செலுத்தலாம். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil