Tamil Nadu News: தமிழக கிராமத்தில் இருக்க கூடிய ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களை தரையில் அமர்த்துவது போன்ற தீண்டாமை கடைபிடித்ததால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது. இதை தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரியின் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்சனைக்கு வேறு எந்த விதத்தில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

"முதலில் இது உணர்ச்சி வயப்படுத்துகிற செய்தி என்பதனால், தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமமாக இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு கற்பிப்பதற்காக தான் பள்ளிக்கூடம் இருக்கிறது. அதனால் தான் காமராஜர் ஆட்சியின் போதே, பள்ளிக்கூடங்களில் சீருடை அணியவேண்டும் என்ற உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டது.
ஆனால், தற்போது பள்ளிக்கூடங்களில் பாகுபாடுகள் நடைபெற்றது என்று புகார் ஏதேனும் வெளிவந்தால் அவை வன்மையாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி முதலமைச்சரை சந்திக்கும்போது கூறியது என்னவென்றால், "காசு இருப்பவர்களுக்கு ஒரு கல்வி, காசு இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்ற சூழல் இங்கு இருக்கக்கூடாது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்", என்று கூறினார். அதுபடியே தற்போது செயல்பட்டு வருகிறார்", என்று அமைச்சர் கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து, "பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நடத்தப்படும் பொதுத்தேர்விற்கு பள்ளி கல்வி இயக்குனர் மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தற்போது, தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்றார் போல காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்விற்கான வினாத்தாள்கள் அச்சிடப்படும் என்று கூறுகிறார்கள். ஆகையால், நிர்வாகம் வசதிக்கு ஏற்றார் போல ஏற்பாடுகள் நடைபெறுவதால், தேர்வின் தேதிகள் எல்லா மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் வரவில்லை.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் விடுமுறை அளிக்கவேண்டும் என்று கூறினோம். ஆனால், சில மாவட்டங்களில் தங்களுடைய ரிசல்ட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக, தலைமை ஆசிரியர்கள் வார இறுதியிலும் பள்ளிக்கூடம் வைக்க வேண்டுதல் தெரிவித்தனர். ஆகையால், கட்டாய பள்ளிக்கூடம் வைக்காமல் நடத்துவதற்கு அந்தந்த மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில், முதல்கட்டமாக 1,545 பள்ளிக்கூடங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தி பதிநாளாயிரத்தி தொண்ணூற்றைந்து குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தற்போது, இந்த திட்டம் எவ்வாறு குழந்தைகளிடம் செல்கிறது என்பதை பார்த்து அதன்பிறகு மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறோம்.
அடுத்த கட்டமாக, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பள்ளிக்கூடங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்தலாம் என்பதை முதல்வரின் அலுவலகம் சமூக நலத்துறையுடன் கலந்துரையாடி முடிவெடுப்பார்கள்”, என்று அமைச்சர் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil