கல்லூரி மாணவர்களுக்கான இலவச போட்டித் தேர்வு பயிற்சியை ’நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
’நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசுத் தேர்வுகளான எஸ்.எஸ்.சி, ரயில்வே, வங்கி, யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி போன்ற பல்வேறு போட்டித் தேர்வு பிரிவில் மாணவர்களுக்கு வழிக்காட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசியபோது “ தமிழக மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளைத்தான் முக்கியமாக பார்க்கின்றனர். ஆனால் எஸ் .எஸ் .சி, யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்காகவும் பயிற்சி பெற வேண்டும்.
அரசு தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், பல லட்சங்களில் கட்டணம் வசூலிக்கின்றனர். கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு, இதுபோன்ற பயிற்சிகளை பெற இயலாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த திட்டம் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்குகிறோம். இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் பணியிடங்களுக்கு தமிழர்கள் செல்ல வேண்டும் இதுதான் எங்கள் கனவு” என்று கூறினார்.
யு.பி.எஸ்.சி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று சிறப்பு திட்ட செயளாக்கத் துறை செயலாளர் டி. உதயசந்திரன் கூறினார்.