தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில் திருச்சி உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணை வழங்கும் விழாவிற்கு திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்து பேசியதாவது;
இதையும் படியுங்கள்: உயர் கல்விக்கு சிறந்த ஆலோசனை; கோயம்புத்தூரில் கல்வி கண்காட்சி
பள்ளிக்கல்வி துறை போட்டி நிறைந்த துறையாகும். தற்போது தனியார் பள்ளிக்கு போட்டியாக அரசு பள்ளியும் உள்ளது, அரசு பள்ளியில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்கின்றனர். அவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர பள்ளி கல்வித்துறை சார்பில் அந்தந்த பள்ளியிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
அதில் துறை சார்ந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கக்கூடிய கல்வி ஆகியோர்களை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட திருச்சி மாவட்டம் முன்னிலையில் இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 800 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக காலை உணவு திட்டம் இதனால் கிராமப்புறங்களில் 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
புதுமைப்பெண் திட்டம் மற்றும் நான் முதல்வன் திட்டம் மூலம் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தமிழர்கள் அதிக பேர் தங்களது சுய விபரத்தை பதிவு செய்தனர். தமிழகத்தில் 832 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அவற்றை விரிவாக சொல்ல இயலாது. தமிழ் கனவு திட்டத்தின் மூலம் கலாச்சாரம், கண்டுபிடிப்பு, நாட்டு நடப்பு ஆகியவற்றை பற்றிய மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக நான்கு இடங்களில் திருச்சி மாவட்டத்தில் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் வெளியூர் கூட செல்லாத அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடு சென்று வருகின்றனர். மாணவர்களின் சேர்க்கையை அரசு பள்ளிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளிகளும் ஊக்குவிக்க வேண்டும் என கூறினார்.
திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, எம்.எல்.ஏ.,க்கள் தியாகராஜன், இனிகோ இருதயராஜ், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திருச்சி மண்டலம் 3 தலைவர் மதிவாணன், திருச்சி எஸ்.பி சுஜித் குமார் ஆகியோர் முன்னிலை வைத்தார்.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருச்சி, அரியலூர், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது; மக்களுக்கு அரசு மட்டுமே எல்லாம் செய்ய முடியாது அதனால் அரசு வேலை வாய்ப்பு போல் தனியார் துறை வேலை வாய்ப்புகள் இருக்கிறது. அதுபோல அரசு பள்ளிக்கு துணையாக தனியார் துறை பள்ளிகள் இருப்பது அரசுக்கு உதவியாகும். அதனால்தான் உங்களை தேடிவந்து தற்பொழுது ஆணைகளை வழங்குகிறோம். இது திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு உங்களது வேலை முடிந்து விடுகிறது. ஆனால் எங்களுக்கு காலை ஐந்து மணிக்கு தொடங்கி இரவு உறங்கும் வரை பணி தொடர்கிறது.
தற்பொழுது பள்ளிகளின் துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தை 4 முதல் 5 முறையாவது சுற்றி வந்து இருப்பார். அதனால்தான் மாணவர்கள் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் அவர் அருகில் சென்று நிற்கின்றனர் என்றார்.
1989 ஆம் ஆண்டு அமைச்சரானபோது எங்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கலைஞர் கூறினார். ஆனால் தற்பொழுது இந்த துறையின் அமைச்சராக இருப்பவர் பதவியேற்றது முதல் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது; தற்பொழுது 10 மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு ஆணைகள் வழங்கப்படுகிறது, தமிழகத்தில் 12 ஆயிரத்து 31 தனியார் பள்ளிகள் உள்ளது. இதில் தமிழகத்தில் 56.9 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நான் அரசு பள்ளிக்கு மட்டும் அமைச்சர் அல்ல, தனியார் பள்ளி மாணவர்களும் எனது குழந்தைகள் தான்.
இந்தியாவிலேயே தனியார் அமைப்புகளோடு சேர்ந்து மாணவர்களின் நலனை மேம்படுத்துதில் தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது. தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகளை தாய்மொழி, ஆங்கில மொழியில் மட்டுமல்லாது. விளையாட்டுத் துறைகளும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
இந்த விழாவில் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ் செல்வி மற்றும் திருச்சி உட்பட 10 மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள், முதல்வர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தனியார் பள்ளி இயக்குனர் நாகராஜ முருகன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நன்றி கூறினார்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil