அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி வளாக துணை பதிவாளர் பார்த்தசாரதி என்பவர் சென்னை நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில், எம்ஐடி வளாக துணை பதிவாளராக பதவி வகிப்பவர் பார்த்தசாரதி. கல்லூரிகளில், பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணிகளை வாங்கி தருவதாக கூறிய இவர் பலரிடம் லட்சகணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனத்திற்கான ஆணையையும் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் அந்த பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு, கல்லூரி வளாகத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, அந்த ஆணை போலியானது என்று கூறி நிர்வாக அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அப்போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதில் அவர் 3.28 கோடி மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"