இந்திய இளைஞர்கள் தாங்கள் கற்ற கல்வியை தேசத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த முன் வரவேண்டும் என மிசோரம் மாநில முதல்வர் லால்துகோமா வேண்டுகோள் விடுத்தார்.
கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 31 ஆவது பட்டமளிப்பு விழா காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடைபெற்றது.
காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற இதில், துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ், அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சர் லால்துகோமா கலந்துக்கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.
விழாவில் மிசோரம் முதல்வர் பேசியதாவது; “தங்களது கல்லூரி வாழ்க்கையை நிறைவு செய்து பட்டங்களை பெறும் இளைஞர்கள், தங்களது குறிக்கோளை கண்டுபிடிக்க முயல வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்வு அர்த்தமற்றது.
தற்போது உலகிற்கு அதிக பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மேலாளர்கள் தேவையிருக்கிறது. அதே நேரத்தி்ல் கருணை, இரக்கம் மற்றும் ஒருமைப்பாடு கொண்டவர்கள் தற்போது முக்கிய தேவையாக இருக்கின்றனர்.
மிகப்பெரிய ஆற்றல் மற்றம் சிக்கலான சவால்களைக் கொண்ட நாடான இந்தியாவில், கல்வியை முடித்து புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இளம் தலைமுறையினர் தாங்கள் கற்ற கல்வியை, தேசத்தின் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையிலும் செயல்பட வேண்டும்.” இவ்வாறு மிசோரம் முதல்வர் பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பால் தினகரன், “இந்த மகிழ்ச்சியான தருணத்தில் காருண்யாவில் கல்வி முடித்த மாணவர்கள் நீங்கள் பெற்றுக்கொண்ட நற்குணங்களை தொடர்ந்து உங்கள் வாழ்வில் கடைபிடித்து, வாழ்ந்து காட்டி சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு உங்கள் தொழில் நுட்ப அறிவின் மூலம் தீர்வுகளை கண்டுபிடித்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து அவர், இறைவனின் ஆசியோடு அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களின் சமூக பொறுப்பின் வெளிப்பாடாக பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக நிதி வழங்கினர். விழாவில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மிசோராம் மாநிலத்தின் முதலமைச்சர் லால்துகோமாவின் தலைமைத்துவத்தையும், சேவைகளையும் பாராட்டி, அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பி.ரஹ்மான், கோவை