மருத்துவ ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்கள் வந்தது எப்படி? ஸ்டாலின் கேள்வி

7.5% முன்னுரிமை இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமளித்துவிடாமல் நேர்மையாக நடத்த முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

By: Updated: November 18, 2020, 04:30:18 PM

Mk stalin statement: தமிழ்நாட்டு மருத்துவக் கலந்தாய்வு ரேங்க் பட்டியலில், பிற மாநில மாணவர்கள் பெயர்கள் இடம்பெற்றது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக் குறித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த மோசடிகளின் பின்னணி என்ன? ரேங்க் பட்டியலைக் கூட முறைகேடுகளின்றி வெளியிட முடியாத அரசு, பட்டியலை உடனடியாக மாற்றி வெளியிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை:

“மருத்துவ கவுன்சிலிங்கை ஆன்லைன் மூலம் நடத்தத் தகுதியற்ற அதிமுக அரசு, நேரடிக் கலந்தாய்வில் மாணவர்கள் – பெற்றோர் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 7.5% முன்னுரிமை இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமளித்துவிடாமல் நேர்மையாக நடத்த முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அதிமுக அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 2020-21ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டுப் பட்டியலில், முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5ஆம் இடத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன. இன்னும் தொடருகிறது.

ஒரே மாணவர் எப்படி இரு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும்?. அப்படியென்றால், அந்த மாணவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக எப்படி இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்? தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் எப்படி இடம் பெற்றார்கள்?

ஆகவே 2020-2021ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் – பிடிஎஸ் கல்வியில் சேருவதற்கான நீட் ரேங்க் பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாகச் சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை அதிமுக அரசு உறுதி செய்ய வேண்டும். வேறு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களை நீக்கம் செய்வதோடு; அவர்கள் எப்படி தமிழக ரேங்க் பட்டியலில் நுழைந்தார்கள், யார் யார் அதற்கு உடந்தை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.”இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Mk stalin statement about neet rank list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X