புதுச்சேரி ஊர் காவல் படை வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று காலை துவங்கி நடைபெற்றது. 12 மையங்களில் 500 பதவிக்கு 4,429 பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 12 மணிக்கு முடிந்தது.
இந்தத் தேர்வுக்கு, தேர்வர்கள் 9:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில் மூன்று இளைஞர்கள் இரண்டு நிமிடம் தாமதமாக வந்த நிலையில் தேர்வு மையம் கேட் மூடப்பட்டது.
இதில் ஒரு வாலிபர் தேர்வு எழுத முடியவில்லை என கேட்டை பிடித்து கதறி அழுதார். எவ்வளவு கோரியும் அனுமதி மறுக்கப்பட்டதால் விரக்தியில் தேர்வு நுழைவுச்சீட்டை சாலையில் வீசிச் சென்றனர். மேலும், பெண் தேர்வர்கள் சிலர் கேட்டை பிடித்துக் கொண்டு அழுதனர்.
முன்னதாக, விண்ணப்பதாரர்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். வேறு மையங்களில் தேர்வு எழுத முடியாது. நுழைவுச் சீட்டில் அவர்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பம் இட்டு எடுத்து வரவேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நுழைவுச் சீட்டுடன் ஆதார் / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுனர் உரிமம் / பாஸ்போர்ட் / வருமான வரி பான் கார்டு இவற்றுள் ஏதாவது ஒன்றின் அசலை (Original) கட்டாயம் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தேர்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 9.30 மணிக்கு மூடப்பட்டது.மேலும் கைரேகை, வருகைப்பதிவு ஆகியவற்றை சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டது.
தேர்வர்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா, நுழைவுச் சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்திற்குக் கொண்டு வரவேண்டும். கைப்பைகள் /செல்போன்கள்/புளு டூத் சாதனங்கள்/ ஹெட் போன்கள் / கால்குலேட்டர்கள் / பென் டிரைவ் போன்ற இதர எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சாதனங்களை தேர்வு நேரத்தில் வைத்திருப்பவர்கள் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு குற்றவியல் நடைமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அனைத்து தேர்வு மையங்களிலும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு அனைத்து தேர்வு அறைகளும் CCTV காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் அனைத்து தேர்வர்களுக்கும் கைரேகை வருகைப்பதிவு செய்யப்பட்டு, சோதனையிடப்பட்ட பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“