தனியார் துறையில் பல வேலைவாய்ப்புகள் இருக்கும் போதிலும் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 முதல் 7 லட்சம் மாணவர்கள் தங்கள் 10-ம் வகுப்பு சான்றிதழ் உடன் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தரவுப்படி (Tamil Nadu Employment Exchange), மாநிலத்தில் 31,47,605 ஆண்களும், 36,07,589 பெண்களும், 272 திருநங்கைகளும் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28, 2023 தரவுப்படி, மொத்தம் 67.56 லட்சம் பேர் அரசு வேலைக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர், இதில் 18.74 லட்சம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள், 28.09 லட்சம் பேர் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 31 முதல் 45 வயது வரை சுமார் 18.34 லட்சம் பேரும், 46 முதல் 60 வயது வரை 2.30 லட்சம் பேரும், 60 வயதுக்கு மேல் 5,811 பேரும் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

போட்டித் தேர்வு
1.45 லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் பதிவு செய்துள்ளனர். அதோடு முதுகலை பட்டதாரிகள் பிரிவின் கீழ் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது சென்னை உயர் நீதிமன்ற வேலை வாய்ப்புகளைத் தவிர மாநில அரசின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி-யின் கீழ் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. TRB மற்றும் TNUSRB ஆகியவையும் தேர்வு மூலம் ஆட்களை நிரம்புகிறது. அரசு வேலையில் சேர விரும்புபவர்கள் போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“