/indian-express-tamil/media/media_files/2025/05/16/l9xb2rDqqJVFLOXn2mc2.jpg)
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) முடிவுகளை அறிவிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக தனது செயல்திறன் பாதிக்கப்பட்டதாக மாணவி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
மே 4 ஆம் தேதி மருத்துவ இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது இந்தூரின் பல பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக மின் தடை ஏற்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாட்டில் 21 லட்சம் தேர்வர்களைப் பாதிக்கலாம்.
மனுதாரர் தனது மனுவில், தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரினார்.
மனுதாரருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிய நீதிபதி சுபோத் அபயங்கர், மின் தடை காரணமாக அவரது நுழைவுத் தேர்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வின் போது அதிகாரிகள் சரியான நிபந்தனைகளை வழங்கத் தவறிவிட்டதாகவும் கூறினார்.
“விசாரணையின் அடுத்த தேதி வரை, நீட் தேர்வு முடிவை பிரதிவாதிகள் அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று சுபோத் அபயங்கர் கூறினார்.
இந்த மனு ஜூன் 30 ஆம் தேதி அடுத்ததாக விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும், பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமை (NTA), மத்திய அரசு மற்றும் மத்தியப் பிரதேச மேற்கு மண்டல மின்சார விநியோக நிறுவனத்திற்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நான்கு வாரங்களுக்குள் அவர்களின் பதிலையும் கோரியுள்ளது.
மனுதாரர்கள் மனு மீது அறிவுறுத்தல்களை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், வியாழக்கிழமை விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் மிருதுல் பட்நாகர், "இந்தூரில் நீட் தேர்வுக்காக அமைக்கப்பட்ட பல மையங்களில் ஜெனரேட்டர்கள் அல்லது மின்சாரத்திற்கான பிற மாற்று ஏற்பாடுகள் இல்லை, வானிலை மையம் ஏற்கனவே மே 4 அன்று நகரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் கூட, ஏற்பாடு செய்யப்படவில்லை" என்று கூறினார். ”மே 4 அன்று வானிலை மோசமடைந்தபோது, மூன்று மணி நேர நுழைவுத் தேர்வின் போது நகரத்தின் பல மையங்களில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, இது தேர்வர்களின் செயல்திறனைப் பாதித்தது” என்று மிருதுல் பட்நாகர் கூறினார்.
திடீர் மின்வெட்டு காரணமாக, சில மையங்களில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதாக மிருதுல் பட்நாகர் கூறினார்.
நீட் யு.ஜி தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிட தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மிருதுல் பட்நாகர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.