கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்கள் பரிந்துரை பெயரில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்காக ஒதுக்கீட்டை நீக்கிய மத்திய அரசு, 2022-23 மற்றும் அதற்குப் பிறகான மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. 47 ஆண்டுகாலம் எம்.பி ஒதுக்கீடு நடைமுறை இன்று முடிவுக்கு வந்துள்ளது.
கல்வி அமைச்ச ஊழியர்களின் குழந்தைகள், எம்.பி.க்களின் பிள்ளைகள் மற்றும் சார்ந்திருக்கும் பேரக்குழந்தைகள், பணியாற்றும் அல்லது ஓய்வுபெற்ற கே.வி ஊழியர்களின் குழந்தைகள் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் பிறவற்றின் விருப்ப ஒதுக்கீடும் நீக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சகத்தின் கீழ் பள்ளிகளை நடத்தும் தன்னாட்சி அமைப்பானகேந்திரிய வித்யாலயா சங்கதன் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீடுகளை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எம்.பி ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் 1 முதல் 9 வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு 10 பெயரை பரிந்துரைக்கலாம். எம்.பி பரிந்துரைக்கும் 10 பெயரும், அவர் தொகுதியை சேர்ந்தவர்களாக கட்டாயம் இருக்க வேண்டும்.
லோக்சபாவில் 543 எம்.பிக்கள், ராஜ்யசபாவில் 245 எம்.பிக்கள் ஆகியோர், 1975ல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு சலுகை திட்ட ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுக்கு 7,880 மாணவ சேர்க்ககள் வரை பரிந்துரைக்கலாம். இரண்டு முறை இந்த சிறப்பு ஒதுக்கீடு வாபஸ் பெறப்பட்டாலும், அரசியல் அழுத்ததால் மீண்டும் செயல்பாட்டு வந்துள்ளது.
கிடைத்த தரவுகளின்படி 2018-19 ஆம் ஆண்டில், அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை 7,880க்கு பதிலாக 8,164 மாணவர்கள் எம்.பி.க்கள் ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 2021 இல், தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது விருப்ப 450 ஒதுக்கீடுகளை ரத்து செய்தார். 2019-20 மற்றும் 2020-21 இல், இந்த பிரிவில் முறையே 9,411 மற்றும் 12,295 சேர்க்கைகள் அரங்கேறியது.
பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா & சௌர்ய சக்ரா, சேனா பதக்கம் (இராணுவம்) பெற்றவர்களின் குழந்தைகளும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW) ஊழியர்களின் 15 குழந்தைகளும், கொரோனாவால் அனாதையான குழந்தைகளும், பணியின் போது உயிரிழந்த மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கும், நுண்கலைகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளையும் சேர்த்து கொள்ளலாம் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil