Muniyanathan IAS appointed as TNPSC interim chairman: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக முனியநாதன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதன் தலைவராக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் செயல்பட்டு வந்தார்.
இந்தநிலையில் பாலச்சந்திரனின் பதவிக்காலம் ஜூன் 9 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாலச்சந்திரன் பதவி ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்து வரும் முனியநாதன் ஐ.ஏ.எஸ் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்படுவார் என மனிதவளத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன் 2010 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். முதுகலை பொருளாதாரம் உள்ளிட்ட நிதி சார்ந்த படிப்புகளைப் பயின்றவர் முனியநாதன். இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil