/indian-express-tamil/media/media_files/n5tVkA7rZkon3550eDTc.jpg)
‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.சி, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சிக்கு இன்று (ஏப்ரல் 29) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் 2023-ல் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையில், எஸ்.எஸ்.சி, ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, ‘நான் முதல்வன் SSC மற்றும் RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை’ தொடங்கவுள்ளது. எஸ்.எஸ்.சி மற்றும் ரயில்வே பயிற்சிக்கு 300 நபர்களும், வங்கி பணிகளுக்கு 700 நபர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தப் பயிற்சியில் சேர ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மே 31 ஆம் தேதி அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.
இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, இன்று (ஏப்ரல் 29) முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் மே13 கடைசி தேதியாகும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.