பொறியியல் மாணவர்கள் சேர்க்கை ரேங்க பட்டியலில் பெயர் இடம்பெறாத மாணவர்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 84 பொறியியல் விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் இடம்பெறவில்லை என புகார் அளித்துள்ளனர்.
நேற்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திற்கு வருகை தந்த உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, "மாணவர்களின் அனைத்து புகார்களும் விசாரிக்கப்படும். அவை உண்மையானது என கண்டறியும் பட்சத்தில், மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியலில் அவர்களது பெயர்கள் சேர்க்கப்படும்.
மாணவர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக மாநிலம் முழுவதும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பாக 51 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் தொலைப்பேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் உதவி மையங்களை அணுகி தங்களது பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக்கொள்ளலாம்.
அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மட்டுமே இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இட ஒதுக்கீட்டைப் பெறத் தகுதியுடையவர்கள்.
அரசுப் பள்ளிகளிலிருந்து குறைந்தபட்சம் 15,660 மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதியுடையவர்கள். தொழில்முறை படிப்புகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 7.5 சதவீத ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புக் குழு ஒன்றையும் அமைத்துள்ளார்" என்றார்.
இந்தாண்டு பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு செப்.14 அன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
மொத்தமாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் உள்ள நிலையில், 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.எனவே, கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 12 ஆயிரத்து 837 இடங்கள் காலியாக உள்ளது. இம்முறை 440 கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.