நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
நீட் தேர்வு (NEET UG 2024) முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. முதல் மதிப்பெண்ணை (720 மதிப்பெண்கள்) 67 மாணவர்கள் பெற்றிருப்பது மற்றும் தேர்வு மையங்களில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அகில இந்திய ரேங்க் 1 மதிப்பெண் பெற்றவர்களில் ஆறு பேர் ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் வரிசை எண்கள் ஒரே மாதிரி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து ஒரே மையத்தில் இருந்து 720க்கு 720 மதிப்பெண்கள் பெறுவது நீட் தேர்வுத் தாள் கசிந்திருப்பதைக் காட்டுகிறது என்று கூறும் ஆர்வலர்கள், கவுன்சிலிங் தொடங்கும் முன், முரண்பாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமை விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று கோருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும், சில மாணவர்கள் ஒரே தேர்வு மையத்திலிருந்து தேர்வு எழுதினர் என்பதால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு என குற்றச்சாட்டு எழுந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் நேர்மையான முறையில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.