தமிழ்நாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் 2023-24 ஆண்டு முதல் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்.சி பி.எட் (B.Sc., B.Ed) படிப்பை வழங்குவதற்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.டி.இ) அனுமதி பெற்றுள்ளது.
இந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள், பி.எஸ்.சி மற்றும் பி.எட் படிப்புகளை தனித்தனியாக மாணவர்களுடன் ஒப்பிடும்போது ஒரு வருடம் குறைவாகப் படிப்பதன் நன்மையைப் பெறுவார்கள். பி.எஸ்.சி படிப்பின் காலம் 3 ஆண்டுகள் மற்றும் பி.எட் படிப்பின் காலம் பொதுவாக இரண்டு ஆண்டுகள். ஆனால் இந்த ஒருங்கிணைந்த படிப்பில் மொத்தம் 4 ஆண்டுகளில் இரண்டு படிப்புகளையும் படித்து முடிக்கலாம். தேசிய கல்விக் கொள்கையின் (NEP) முக்கிய பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்.
இதையும் படியுங்கள்: ஐ.ஐ.டிகளில் எஸ்.சி,எஸ்.டி செல்கள் நிலை: செயல்பாடும் இல்லை நிதியும் இல்லை; ஏ.பி.பி.எஸ்.சி அதிர்ச்சி தகவல்
”ஐ.ஐ.டி மெட்ராஸ் 2023-24 ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எஸ்.சி பி.எட் படிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நாங்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற அறிவியல் பாடங்களை சிறப்பாக கற்பித்து வருகிறோம். ஆசிரியர் கல்விப் பட்டப்படிப்புக்கு (B.Ed), டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் உடன் இணைவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இரண்டிலும் சிறந்ததை எடுத்துக்கொண்டு இந்தப் படிப்பை தொடங்க விரும்புகிறோம்,” என ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி கூறினார்.
மேலும், “நாங்கள் பி.எஸ்.சி கணிதம் பிளஸ் கம்ப்யூட்டிங் மற்றும் பி.எட் படிப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம். இது இன்னும் செனட்டால் அங்கீகரிக்கப்படவில்லை. மேல்நிலை மட்டத்தில் நல்ல கணித ஆசிரியர்களை உருவாக்க விரும்புகிறோம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். பி.எஸ்.சி படிப்பு ஆன்லைனிலும், பி.எட் படிப்பு ஆஃப்லைனிலும் வழங்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.
”தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் 2024-25 ஆண்டு முதல் ஒருங்கிணைந்த படிப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (CUET) மூலம் மாணவர்களை சேர்க்க விரும்புகிறோம். வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு புதிய ஆசிரியர்களும் தேவை. இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அடுத்த கல்வியாண்டு முதல் படிப்பை வழங்குவோம்,” என்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் (CUTN) துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறினார்.
மேலும், ”படிப்பில் 40 இடங்கள் இருக்கும். ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளுக்கான தேவை காரணமாக அனைத்து இடங்களும் நிரப்பும் என எதிர்பார்க்கிறோம். பல்கலைக்கழகம் ஏற்கனவே பி.எட் பட்டத்தை வழங்குகிறது மற்றும் பல்கலைக்கழகத்தின் கல்வித் துறை புதிய ஒருங்கிணைந்த பட்டப்படிப்பையும் வழங்கும்,” என்றும் அவர் கூறினார்.
ஆசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு, ஒரு வருட படிப்புக் காலம் குறைவாக இருப்பதால் பி.எஸ்.சி பி.எட் படிப்பில் சேர பெரும் ஆர்வம் இருக்கும். இளங்கலை படிப்பின் இரண்டாம் அல்லது மூன்றாம் ஆண்டு முதல் ஆசிரியர் கல்வியை பாடத்திட்டத்தில் இணைக்கலாம். இது சிறந்த ஆசிரியர்களை உருவாக்க உதவும், என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil