இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கிற்கு அகில இந்திய அளவில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முடிவுகள் ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைப் பெறுவதற்கு நீட் தேர்வு தகுதி பெறுவது அவசியம். இந்த ஆண்டு நீட் தேர்வில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் படிப்புக்கு அழைக்கும் செக் குடியரசு: விண்ணப்பிக்கும் முறை- கட்டணம் விவரம் இங்கே!
இதனிடையே ஜூலை இரண்டாவது வாரத்தில் அகில இந்திய அளவில் நீட் கவுன்சிலிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது ஜூலை 15 ஆம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்க்கைப் பெற நாடு முழுவதும் 11.45 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங்கை மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி நடத்துகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் 15% இடங்கள் நிரப்பப்படும். மீதமுள்ள 85% இடங்கள் அந்தந்த மாநிலங்கள் நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.
இந்த ஆண்டு புதிதாக 23 மருத்துவ கல்லூரிகளின் வரவுடன் நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் மேலும், பி.டி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 26,949 ஆகவும் அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 54278 ஆகவும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 50315 ஆகவும் உள்ளது. இதனிடையே மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி நீட் கவுன்சிலிங்கை 4 சுற்றுகளாக நடத்த உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil